பீகார் இமாலய வெற்றி.. அல்லு விடும் திமுக..! பிஜேபியை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. இதன் தாக்கம் தமிழக அரசியலிலும் எதிரொலிக்கும் என்பதால், திமுக தனது கூட்டணி மற்றும் அரசியல் வியூகங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது.

பாஜக எதிர்ப்புக்கு தயாராகும் திமுக
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட், மிசோரம், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் இடைத்தேர்தல் எண்ணிக்கையும் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன. இதில் 7.43 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
அரசு அமைக்க ஒரு கூட்டணிக்கு 243 இடங்களில் குறைந்தது 122 இடங்கள் தேவை. மொத்த இடங்களின் பாதி + ஒரு இடம் என்ற கணக்கில்தான் மேஜிக் நம்பர் தீர்மானிக்கப்படுகிறது. இந்த முறை பீகாரில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நவம்பர் 6, 11 தேதிகளில் நடைபெற்றது. இம்முறை 66.90% என்ற சாதனை பதிவாகியுள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகள்
பீகாரின் பிரதான அரசியல் கட்சிகள் RJD, JDU, BJP மற்றும் காங்கிரஸ். இதற்கு இணையாக, சிராக் பாஸ்வானின் LJP (RV), முகேஷ் சஹானியின் VIP, ஜிதன் ராம் மாஞ்சியின் HAM போன்றவை முக்கிய சக்திகளாக உள்ளன. 2005 முதல் நிதிஷ் குமார் தொடர்ந்து பீகார் முதல்வராக உள்ளார். தற்போதைய முக்கிய வேட்பாளர்களில் தேஜஸ்வி யாதவ் (RJD), சம்ராட் சௌதரி (BJP), விஜய் சின்ஹா (BJP), விஜய் சௌதரி (JDU), ராம் கிரிபால் யாதவ் (BJP) உள்ளிட்டோர் அடங்குவர்.
மேலும் அனந்த் சிங், தீபா மாஞ்சி, நிதின் நபீன், ரமேஷ் ராம் போன்ற பலர் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். பீகாரின் முக்கியத் தொகுதிகள் ராகோபூர், தாராபூர், மகுவா, லக்ஷிசரை, பெட்டியா, மோகாமா, குடும்பா, கயா டவுன், சாசாரம், கோவிந்த்கஞ்ச், டானாபூர், சப்ரா உள்ளிட்டவை. இவை அனைத்தும் அரசியல் திசையை மாற்றும் ‘ஹாட் சீட்கள்’ என கருதப்படுகின்றன. 2020 தேர்தலில் RJD 75, BJP 74, JDU 43 இடங்களை வென்றது.
பீகாரில் என்டிஏ கூட்டணி
காங்கிரஸ் 19 இடங்கள் மற்றும் CPI-ML 12 இடங்களை பிடித்தன. அதற்கு முந்தைய 2015 தேர்தலில் RJD 80, JDU 71, காங்கிரஸ் 27 இடங்கள் பெற்று மகாகட்பந்தன் 178 இடங்களை வென்று பெரிய வெற்றி பெற்றது. தற்போது வெளியாகியுள்ள விவரங்களின்படி என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் NDA இமாலய அளவு வெற்றி பெரும் என்று தற்போதைய நிலவரங்கள் கூறுகிறது. ஒருவேளை என்டிஏ பீகாரில் வெற்றிபெற்றால், இது நரேந்திர மோடி தலைமையிலான BJP-யை தேசிய அளவில் மேலும் பலப்படுத்தும்.
இந்த முடிவு, 2026 தமிழக அரசியல் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம். இதை கவனித்த திமுக, வரும் மாதங்களில் தனது கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டப்போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியை வலுப்படுத்தும் திமுக
இந்தத் தேர்தல் முடிவுகள், பாஜக-வுக்கு மீண்டும் ஒரு சக்தியைத் தர, திமுக-யை ஒரு அளவு கவலையடைய வைத்துள்ளது. ஏனெனில், வடஇந்தியாவில் நடந்த இந்த வெற்றி, தெற்கிலும் பாஜகவின் முனைப்பை அதிகரிக்கும். அதனால்தான் திமுக அடுத்த சில மாதங்களில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
முதல் நடவடிக்கை கூட்டணியை ஸ்ட்ராங் செய்வதாக நிச்சயம் இருக்கும். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் ஒருங்கிணைப்பை மேலும் இறுக்கமாக்குவது திமுகவின் முதன்மை இலக்காக இருக்கும்.
திமுக எடுக்கப்போகும் அஸ்திரம்
இதில் இரண்டாவது தமிழ்நாட்டில் மோடி–பாஜக எதிர்ப்பை அதிகரிப்பது, பொருளாதார பிரச்னைகள், மாநில உரிமை, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் பாஜகவுக்கு நேரடியாக சவால் விடுக்கும் பிரச்சாரத்தை திமுக வலுப்படுத்தும்.
பீகார் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும். அதனால், சமூக நீதி, பெண்கள்–இளைஞர் நலன், பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய மாநில அளவிலான புதிய பிரச்சாரத் திட்டங்களை திமுக அமைக்கத் தொடங்கும். மொத்தத்தில், பீகார் வெற்றிக்குப் பிறகு பாஜக உற்சாகமாக இருந்தாலும், திமுகவுக்கு கவலையாக இருக்கும் என்று கூறலாம்.