- Home
- இந்தியா
- 180 கிமீ வேகம்! ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தவில்லை! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வாட்டர் டெஸ்ட் வெற்றி!
180 கிமீ வேகம்! ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தவில்லை! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வாட்டர் டெஸ்ட் வெற்றி!
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், மணிக்கு 180 கி.மீ வேகத்தில் தனது இறுதி அதிவேக சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த சோதனையின் போது ரயிலின் நிலைத்தன்மை சிறப்பாக இருந்தது 'வாட்டர் டெஸ்ட்' மூலம் உறுதி செய்யப்பட்டது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
இந்திய ரயில்வேயின் மிக நீண்ட கால எதிர்பார்ப்பான 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' (Vande Bharat Sleeper) ரயில், தனது இறுதி கட்ட அதிவேக சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்றபோதும், ரயிலின் நிலைத்தன்மை சிறப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்காக நடத்தப்பட்ட 'வாட்டர் டெஸ்ட்' (Water Test) வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதிவேக பயணத்தில் ரயிலின் நிலைத்தன்மை
ராஜஸ்தானின் கோட்டா - நாக்டா இடையேயான ரயில்வே பகுதியில் இந்தச் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது ரயில் தனது அதிகபட்ச வடிவமைப்பு வேகமான மணிக்கு 180 கிலோமீட்டரை எட்டியது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ரயில் 180 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் போது, மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய கண்ணாடி டம்ளர்கள் துளி கூட அசையாமல் இருந்தன.
ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாதது, இந்த ரயிலின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிர்வு இல்லாத பயண வசதியை (Superior Ride Quality) உறுதிப்படுத்தியுள்ளது.
Vande Bharat Sleeper tested today by Commissioner Railway Safety. It ran at 180 kmph between Kota Nagda section. And our own water test demonstrated the technological features of this new generation train. pic.twitter.com/w0tE0Jcp2h
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 30, 2025
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பம்சங்கள்
நீண்ட தூர இரவு நேரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பல உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன:
• பெட்டிகளின் அமைப்பு: மொத்தம் 16 ஏசி பெட்டிகள் (11 மூன்றடுக்கு ஏசி, 4 இரண்டடுக்கு ஏசி மற்றும் 1 முதல் வகுப்பு ஏசி).
• சொகுசு வசதிகள்: மென்மையான படுக்கைகள், மேல் பெர்த்திற்குச் செல்ல வசதியான ஏணிகள் மற்றும் ரயிலுக்குள் நுழைய தானியங்கி கதவுகள்.
• தொழில்நுட்பம்: விமானங்களில் இருப்பது போன்ற பயோ-வேக்யூம் கழிப்பறைகள், முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் வெந்நீர் குளியல் (Shower) வசதி.
• பாதுகாப்பு: இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பமான 'கவாச்' (KAVACH) மோதல் தவிர்ப்பு அமைப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்திய ரயில்வே அடுத்த சில ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், மிக விரைவில் இந்த ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக டெல்லி - பாட்னா போன்ற முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

