இந்திய ரயில்வே, பான் மசாலா மற்றும் குட்கா எச்சில் கறைகளை சுத்தம் செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி செலவிடுகிறது. இந்த பெரும் தொகையைக் கொண்டு சுமார் 10 புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவின் போக்குவரத்து அமைப்பின் அடிப்படை தூணாக இந்திய ரயில்வே கருதப்படுகிறது. தினமும் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் ரயில்களை நம்பி பயணம் செய்கின்றனர். ஆனால், இந்த முக்கிய சேவையைப் பயன்படுத்தும் சில பயணிகளின் பொறுப்பற்ற பழக்கம், ரயில்வேக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. குறிப்பாக, பான் மசாலா மற்றும் குட்கா போன்றவற்றை உபயோகித்து ரயில் பெட்டிகள் மற்றும் நிலையங்களில் துப்புவது, பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த எச்சில் கறைகளை அகற்ற இந்திய ரயில்வே ஆண்டுதோறும் செலவிடும் தொகை கேள்விப்பட்டால் அதிர்ச்சியளிக்கும். பான் மசாலா மற்றும் குட்கா துப்பலால் உருவாகும் கறைகளை சுத்தம் செய்ய மட்டும், ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி செலவிடப்படுகிறது. ரயில் பெட்டிகள், நடைமேடைகள், நிலைய வளாகங்கள் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க இவ்வளவு பெரிய தொகை பயன்படுத்தப்படுகிறது.

இந்த செலவு எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ள ஒரு உதாரணம் போதும். ஒரே ஆண்டில் குட்கா எச்சில் சுத்தத்திற்கு செலவாகும் பணத்தில், சுமார் 10 புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க முடியும். ஒரு வந்தே பாரத் ரயிலை தயாரிக்க 110 முதல் 120 கோடி ரூபாய் வரை செலவாகிறது. இதே தொகையில் பல ராஜ்தானி ரயில்களையும் உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்கா என்பது புகையிலை, பாக்கு மற்றும் நறுமணப் பொருட்கள் கலந்த ஒரு மெல்லும் பொருள். இதை பொது இடங்களில் பயன்படுத்தி துப்புவது, சுற்றுப்புறத்தை அசிங்கமாக மாற்றுவது, சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. காலப்போக்கில் இந்த கறைகள் சுவர்கள், இருக்கைகள் மற்றும் தரைகளில் நிரந்தரமாக பதிந்து விடுகின்றன.

தூய்மையற்ற இந்த சூழல் ரயில்களின் அழகையும் மட்டுமல்ல, பயணிகளின் உடல்நலத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில், எச்சில் மழைநீருடன் கலந்து, நோய்கள் பரவும் அபாயம். இது குழந்தைகள், முதியவர்கள் போன்றோருக்கு கூடுதல் ஆபத்தை உருவாக்குகிறது.

தூய்மை இந்தியா போன்ற பல விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பொதுமக்களின் பழக்கங்களில் மாற்றம் இல்லாமல் இந்த பிரச்சினை தொடர்கிறது. குட்கா கறைகளை சுத்தம் செய்ய செலவாகும் இந்த கோடிகளை, ரயில்வே பாதுகாப்பு, பயணிகள் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். அதற்காக, ஒவ்வொரு பயணியும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது இன்றியமையாத தேவையாக உள்ளது.