இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு! பயணிகள் எவ்வளவு கூடுதலாக செலுத்த வேண்டும்?
இந்திய ரயில்வே நீண்ட தூர ரயில் பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. நான்-ஏசி மற்றும் ஏசி வகுப்புகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். புதிய ரயில் கட்டணங்களை பொதுமக்கள், ரயில் பயணிகள் என அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

ரயில் டிக்கெட் விலை உயர்வு
இன்று முதல் இந்தியாவில் நீண்ட தூர ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு செலவு அதிகமாக உள்ளது. இந்திய ரயில்வே நாடு முழுவதும் புதிய பயணக் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இது இரண்டாவது முறையாக ரயில் பயணக் கட்டணங்கள் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண மாற்றம் இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் கட்டண உயர்வு
புதிய கட்டண முறையின்படி, 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் நான்-ஏசி பயணிகளுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான்-ஏசி வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஏசி வகுப்புகளுக்கும் இதே அளவு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, 500 கி.மீ பயணத்திற்கு நான்-ஏசி மெயில் ரயிலில் பயணம் செய்வோர் ரூ.10 மட்டுமே கூடுதலாக செலுத்த வேண்டும்.
இந்திய ரயில்வே அறிவிப்பு
இந்த கட்டண உயர்வு குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சகம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே சேவைகள் தொலைதூர பகுதிகளுக்கு கூட விரிவடைந்துள்ளதால், செயல்பாட்டு செலவுகளை சமாளிக்க கட்டண மாற்றம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் கட்டணம்
ஆனால், புறநகர் ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கு எந்த கட்டண மாற்றமும் இல்லை என்பது பயணிகளுக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கிறது. சாதாரண நான்-ஏசி சேவைகளில் பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. 215 கி.மீ வரை எந்த உயர்வும் இல்லை; 216 முதல் 750 கி.மீ வரை ரூ.5, 751 முதல் 1,250 கி.மீ வரை ரூ.10 என கட்டணம் உயர்கிறது.
பயண கட்டண மாற்றம்
இந்த புதிய கட்டண உயர்வு ராஜதானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், கரிப்ரத், அம்ரித் பாரத், ஜன சதாப்தி உள்ளிட்ட முக்கிய ரயில்களுக்கு பொருந்தும். பயணிகளின் வசதியையும், ரயில்வேயின் நீண்டகால வடிவமைப்பையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாக இந்த கட்டண மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

