- Home
- இந்தியா
- ரம்மி மேல உனக்கு அவ்வளவு பிரியமா.? அப்ப நீ விளையாட்டு துறைக்கு அமைச்சர் ஆயிடு - முதலமைச்சர் அதிரடி உத்தரவு
ரம்மி மேல உனக்கு அவ்வளவு பிரியமா.? அப்ப நீ விளையாட்டு துறைக்கு அமைச்சர் ஆயிடு - முதலமைச்சர் அதிரடி உத்தரவு
சட்டசபை கூட்டத்தின்போது ரம்மி விளையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மாணிக் கோகடே வேளாண்மைத் துறையிலிருந்து நீக்கப்பட்டு விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சர்
மக்களுக்கு நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக எம்எல்ஏவாக தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு மக்களால் அனுப்பப்படுகிறார்கள். ஆனால் அங்கு மக்கள் தொடர்பான பிரச்சனையை பேசாமல் அமைச்சர் ஒருவர் ரம்மி விளையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த அமைச்சருக்கு விளையாட்டுத்துறையை வழங்கி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சர் மாணிக் கோகடே நாசிக் மாவட்டத்தின் சின்னர் தொகுதியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP - அஜித் பவார் பிரிவு) எம்.எல்.ஏ ஆவார். அவர் மகாராஷ்டிராவின் வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற்ற போது அமைச்சர் மாணிக் கோகடே தனது மொபைல் போனில் "ஜங்கிள் ரம்மி" விளையாடுவது போன்ற வீடியோ வெளியானது.
வீடியோவை வெளியிட்ட எம்எல்ஏ
இந்த வீடியோவை மஹாராஷ்டிராவில் சரத் பவார் பிரிவு எம்.எல்.ஏ ரோஹித் பவார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். மேலும் விவசாயிகளின் தற்கொலை, வேலையின்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும்போது, அமைச்சர் ரம்மி விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதே போல எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாத் இரண்டு வீடியோக்களையும் வெளியிட்டார். அதில் அமைச்சர் மாணிக் கோகடே ரம்மி விளையாடிய காட்சிகள் இடம்பிடித்திருந்தது. அதில் அமைச்சர் கோகடே 42 வினாடிகள் அல்ல, 18 முதல் 22 நிமிடங்கள் வரை ரம்மி விளையாடியதாக ரோஹித் பவார் கூறினார். இந்த வீடியோக்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ரம்மி விளையாடவில்லை- அமைச்சர் மறுப்பு
ஆனால் இந்த புகாரை மறுத்த அமைச்சர் கோகடே, தான் ரம்மி விளையாடவில்லை என்று மறுத்தார். YouTube பார்த்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரம் (ரம்மி ஆப்) தோன்றியதாகவும், அதை மூட முயற்சித்ததாகவும் கூறினார். மேலும் இந்த வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை என தெரிவிதிருந்தார்.
மேலும் இந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக எச்சரித்தார்.இதனிடையே மாணிக் கோகடேவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை
இந்த சூழலில் வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றி வந்த மாணிக் கோகடே அந்த துறையில் இருந்து நீக்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விளையாட்டுத்துறை பொறுப்பு வகித்து வந்த தத்ததராயா பார்வே வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை வழங்கி முதலமைச்சர் இந்த அறிவிப்பு சமூகவலைதளத்தில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.