AI போரில் கோடிகளைக் கொட்டும் மெட்டா! இந்தியருக்கு ரூ.800 கோடி சம்பளம்!
மெட்டா, 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' ஆய்வகத்தை உருவாக்கி, ஆப்பிள், ஓப்பன்ஏஐ போன்ற நிறுவனங்களில் இருந்து சிறந்த AI வல்லுநர்களை ரூ.1600 கோடி வரை சம்பளம் அளித்து ஈர்த்து வருகிறது. மனிதனை மிஞ்சும் AI தொழில்நுட்பத்தை உருவாக்க முயல்கிறது.

மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), தனது நிறுவனத்தின் புதிய 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகத்திற்காக' ஒரு கனவுக் குழுவை (Dream Team) உருவாக்கி வருகிறார். ஆப்பிள், ஓப்பன்ஏஐ (OpenAI), கூகிள் டீப்மைண்ட் (Google DeepMind), மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) போன்ற முன்னணி நிறுவனங்களில் இருந்து சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக, மெட்டா ரூ.800 கோடி முதல் ரூ.1,600 கோடிக்கும் அதிகமான தொகை வரை சம்பளமாக வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதனை மிஞ்சும் AI தொழில்நுட்பம்
மெட்டாவின் இந்த முயற்சி, நிறுவனத்தின் பல்வேறு AI திட்டங்களை ஒருங்கிணைத்து, "சூப்பர் இன்டெலிஜென்ஸ்" (Superintelligence) எனப்படும் மிக உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சாதாரண செயற்கை பொது நுண்ணறிவை (AGI) விடவும் ஒரு படி மேலே செல்கிறது. இது மனித மூளையை விட வேகமாக, பகுத்தறிந்து, நினைவாற்றலுடன், தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறனுடன் செயல்படும் AI அமைப்புகளை உருவாக்கும் முயற்சியாகும். இந்த அதிரடி ஆள்சேர்ப்பு, AI துறையில் உள்ள போட்டியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
முன்னாள் ஆப்பிள் ஊழியருக்கு ரூ.1600 கோடி சம்பளம்!
மெட்டா செய்துள்ள மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்று ஆப்பிள் நிறுவனத்தின் ரூமிங் பாங் (Ruoming Pang) உடனானது. சீனாவைத் தாயகமாகக் கொண்ட இவருக்கு ரூ.1,600 கோடிக்கும் அதிகமான ஊதிய தொகுப்புடன் மெட்டாவில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஓப்பன்ஏஐ-யைச் சேர்ந்த டிராபிட் பன்சல் (Trapit Bansal) என்பவருக்கு ரூ.800 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது AI துறையில் நிலவும் கடும் போட்டியைக் காட்டுகிறது.
இந்த சம்பள தொகுப்பில் அடிப்படை சம்பளம், போனஸ், ஈக்விட்டு பங்குகள் உள்ளிட்ட பல பலன்களும் அடங்கும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. AI துறையில் திறமையானவர்களைக் கவர மெட்டா வழங்கும் இந்தச் சம்பளம் உலகளாவிய வங்கிகளின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளத்தை மிஞ்சும் அளவுக்கு அதிகமாக உள்ளது.
மெட்டாவின் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகம்' ஏன்?
மெட்டாவின் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகம்' (Meta’s Superintelligence Lab), ஓப்பன்ஏஐ (OpenAI), கூகிள் டீப்மைண்ட் (Google DeepMind) மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு, இணையற்ற அறிவாற்றல் திறன்களையும், நிஜ உலக பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலையும் கொண்ட அடுத்த தலைமுறை AI அமைப்புகளை உருவாக்க உருவாக்கப்பட்டு வருகிறது. ஜுக்கர்பெர்க் AI-க்கு முன்னுரிமை அளித்து, சிறந்த திறமையாளர்களைக் கொண்டு வர பெரும் தொகை செலவழிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மெட்டாவின் MSL குழுவில் உள்ள பிரபலங்கள்
மெட்டாவின் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகத்திற்கு' AI மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள சில முக்கிய நபர்கள் தலைமை தாங்குகின்றனர். முன்னாள் கிட்ஹப் (GitHub) தலைமை நிர்வாக அதிகாரி நட் ஃபிரைட்மேன் (Nat Friedman), ஆப்பிளின் ஃபவுண்டேஷன் மாடல்கள் குழுவின் முன்னாள் தலைவர் ரூமிங் பாங் (Ruoming Pang), ஓப்பன்ஏஐ 'ஓ-சீரிஸ்' மாடல்களில் முக்கியப் பங்காற்றிய டிராபிட் பன்சல் (Trapit Bansal), GPT-4o-வஐ உருவாக்கியவர்களில் ஒருவரும் கூகிள் நிறுவனத்தில் முன்னாள் விஞ்ஞானியுமான ஹுய்வென் சாங் (Huiwen Chang), கூகிள் டீப்மைண்டில் ஜெமினி 2.5 இல் தலைமை வகித்த ஜாக் ரே (Jack Rae) உள்பட பிரபல தொழில்நுட்ப வல்லுநர்கள் மெட்டாவின் குழுவில் இணைந்துள்ளனர்.
சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்றால் என்ன?
மனிதனின் அறிவாற்றல் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் செயற்கை பொது நுண்ணறிவு (AGI) போலல்லாமல், "சூப்பர் இன்டெலிஜென்ஸ்" (Superintelligence) என்பது அனைத்து துறைகளிலும் மனித நுண்ணறிவை விட மிக அதிகமாக செயல்படும் AI அமைப்புகளைக் குறிக்கிறது. இது குறித்து இன்னும் ஆரம்பநிலை ஆய்வுகளே நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், மருத்துவம், அறிவியல், பொருளாதாரம் மற்றும் படைப்பாற்றல் போன்ற பல்வேறு துறைகளில் சிக்கலான பிரச்சனைகளை AI மூலம் தீர்க்கக்கூடிய வகையில் சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. AI துறையில் நிலவும் போட்டியில் முன்னிலை வகிக்கும் இலக்குடன் அதிக முதலீடு செய்து திறமையாளர்களை கவர்வதில் மெட்டா தீவிரமாக உள்ளது.