காம்ரேட் வி.எஸ். அச்சுதானந்தன்! கேரள அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் இன்று காலமானார். தொழிற்சங்கத் தலைவராகத் தொடங்கி, முதலமைச்சர் வரை உயர்ந்த அவரது வாழ்க்கைப் பயணம், போராட்டங்களும் சாதனைகளும் நிறைந்தது.

வி.எஸ். அச்சுதானந்தன் வாழ்க்கை வரலாறு
கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் இன்று (திங்கட்கிழமை) காலமானார். மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் அவரது உயிர் பிரிந்தது. 101 வயதான அச்சுதானந்தன் பல போராட்டங்களைச் சந்தித்து அரசியலில் தனது முத்திரையைப் பதித்தவர். அவரது வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கலாம்.
வேலிககத்து சங்கரன் அச்சுதானந்தன்
வேலிககத்து சங்கரன் அச்சுதானந்தன், 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஆலப்புழா மாவட்டம் புன்னப்பராவில் பிறந்தார். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், ஏழாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்திக்கொண்டார். வாழ்வாதாரத்திற்காக தையல் கடையிலும், பின்னர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வேலைக்குச் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, 1938 ஆம் ஆண்டு மாநில காங்கிரஸில் இணைந்தார். 1940 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்தார்.
40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை
தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சுமார் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார். 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1980 முதல் 1992 வரை சி.பி.எம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார்.
ஊழலுக்கு எதிரான உறுதி
பலமுறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சுதானந்தன், 1992 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். தனது 82 வது வயதில், 2006 ஆம் ஆண்டு கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 2006 முதல் 2011 வரை அவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார். மூணாறில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியது, கேரளாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது, ஊழலுக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாடு போன்றவை அவரது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்கவை.
முதுமையிலும் மக்கள் பணி
ஆட்சியிலிருந்து விலகிய பிறகும், 2011 முதல் 2016 வரை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். தனது முதுமையிலும் மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர், கேரள அரசியலில் ஒரு வலிமையான மற்றும் சர்ச்சைக்குரிய தலைவராகவும் அறியப்பட்டார். அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறை ஆகியவை அவரை கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தன.