தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உடல் நிலை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
Tamilnadu CM MK Stalin's Health Update: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முதல்வருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றுல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வரின் உடல்நிலை பாதிப்புகளை கண்டறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று கூறப்பட்டு இருந்தது.
முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அமைச்சர்கள், திமுகவினர் மூத்த நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். பின்பு பேசிய அவர், ''முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது. இன்று மாலை வீடு திரும்புவார்'' என்று தெரிவித்தார்.
2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து
இதேபோல் அமைச்சர் துரைமுருகனும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.பின்பு மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இன்று மாலை கூட வீடு திரும்பலாம்'' என்றார். முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திருப்பூரில் அவர் கலந்து கொள்ள இருந்த 2 நாள் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் நாளையும், நாளை மறுநாளும் பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலினிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசி உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை முதல்வர் ஸ்டாலின் தனது உடல்நலனில் கவனம் செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். உடல்நலத்தைப் பற்றி பொருட்படுத்தாமல், ஓய்வில்லாமல் உழைக்கும் அவர் தனது உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். மருத்துவமனையில் இருக்கும் அவர் பூரண நலம் பெற விழைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
