தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர் பயணங்களின் நடுவே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Chief Minister Stalin admitted to hospital : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்கிறதா.? மக்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளது என்பதை கேட்பதற்காகவும் இந்த பயணத்தில் முக்கிய அம்சமாக உள்ளது. இது மட்டுமில்லாமல் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களில் மட்டும் திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

தொடர் பயணம் - உடல்நிலை பாதிப்பு

ஓய்வின்றி தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். இதனிடையே இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிகழ்வு முடிந்ததையடுத்து அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் காரில் சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றுள்ளார். 

அங்கு முதலமைச்சர் ஸ்டாலினின் உடல் நிலை தொடர்பாக பரிசோதனையானது நடைபெற்றது. இதனையடுத்து 2 நாட்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

மேலும் அந்த அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றுல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து முதல்வரின் உடல்நிலை பாதிப்புகளை கண்டறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் மருத்துவமனையில் குவிய தொடங்கியுள்ளனர்.