கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் 101 வயதில் காலமானார்
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் (101) காலமானார். மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் காலமானார். அவரது மறைவு கேரள அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வி.எஸ். அச்சுதானந்தன்
கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) இன்று (திங்கட்கிழமை) காலமானார். மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3.20 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
82 வயதில் முதலமைச்சர் பதவி
வி.எஸ். அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராகப் பணியாற்றினார். அச்சுதானந்தனின் மறைவு கேரள அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக திகழ்ந்த அவர், எளிமை, நேர்மை, மக்கள் நலன் மீது கொண்ட அக்கறை ஆகியவற்றின் அடையாளமாகப் போற்றப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
தனது அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். முதிய வயதிலும் அரசியல் அரங்கில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த அவர், கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அச்சுதானந்தனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.