மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரும் விடுதலை! விசாரணையில் கோட்டை விட்ட அரசு!
2006ஆம் ஆண்டு மும்பை புறநகர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் உயிருடன் உள்ள 11 பேரை மும்பை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு
2006ஆம் ஆண்டு மும்பை புறநகர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதாகக் கூறி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர ரயில் குண்டுவெடிப்புகள், நாட்டையே உலுக்கியது. இந்த கோர சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 189 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 820 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான லஷ்கர் இ குவாகர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கு தொடர்பாக கமல் அன்சாரி, முகமது பைசல், குட்புதின் சித்திக், நவீத் ஹசன் கான், ஆசீப் கான், தன்வீர் அகமது, முகமது மஜித், ஷேக் முகமது அலி, முகமது சஜித், ரகுமான் ஷேக், ஷாகில் முகமது, சமீர் அகமது ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், 2015ஆம் ஆண்டு 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் மகாராஷ்டிராவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி 12 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி கமல் அன்சாரி கடந்த 2021ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் கொரோனாவால் உயிரிழந்தார்.
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை
இந்நிலையில், மும்பை ரயில் குண்டுவெடிப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தண்டனை பெற்றிருந்த 12 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனாவால் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், எஞ்சிய 11 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.