கொச்சியிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் இன்று தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. கனமழை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கேரளாவின் கொச்சியிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் (AI 2744 A320, பதிவு எண் VT-TYA) இன்று (திங்கட்கிழமை) மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. கனமழை காரணமாக பாதையிலிருந்து வழுக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் பாதிகப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

காலை 9:27 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கிய உடனேயே ஓடுபாதையில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. தரையிறங்கும்போது விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாகவும், விமானத்தின் என்ஜின் சேதமடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விமானம் பாதுகாப்பாக டெர்மினல் பகுதிக்குச் சென்று சேர்ந்தது.

Scroll to load tweet…

ஏர் இந்தியா அறிக்கை

ஏர் இந்தியா நிறுவனம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. "கொச்சியிலிருந்து மும்பைக்கு இயக்கப்படும் AI2744 விமானம், ஜூலை 21, 2025 அன்று தரையிறங்கும் போது பலத்த மழையை எதிர்கொண்டது. இதன் காரணமாக தரையிறங்கிய பின் ஓடுபாதையில் இருந்து விலகியது. விமானம் பாதுகாப்பாக வாயிலை அடைந்ததோடு, அனைத்துப் பயணிகளும், விமான ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். விமானம் ஆய்வுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமையாகும்" என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

விமான நிலையத்தின் அறிக்கை

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அவசரகால மீட்புக் குழுக்கள் நிலைமையை உடனடியாகக் கையாண்டன. "கொச்சியிலிருந்து வந்த ஒரு விமானம் இன்று ஜூலை 21, 2025 அன்று காலை 09:27 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகியது. சிஎஸ்எம்ஐஏவின் அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக செயல்பட்டன. அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதை 09/27 க்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்ய, இரண்டாம் நிலை ஓடுபாதை 14/32 பயன்படுத்தப்படுகிறது. எப்போதும் பாதுகாப்புக்கு முதன்மையான முன்னுரிமை அளித்து வருகிறோம்." என்று விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஓடுபாதையில் சேதம்

விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதையான 09/27 சிறிய சேதமடைந்துள்ளதுடன், தற்போது ஆய்வு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான அட்டவணைகளில் குறைந்தபட்ச மாற்றத்துடன் விமான சேவைகளைத் தொடர, விமான நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக இரண்டாம் நிலை ஓடுபாதைக்கு மாற்றப்பட்டுள்ளன.