Diabetes : சுகர் 300ஆக இருந்தால் நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா?
உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு 300க்கு மேல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

What To Do If Sugar Level Increases
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை. கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து கொள்ளபவராக இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த வழிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுதவிர சில உணவுகளை தவிர்க்க வேண்டும். எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
கார்போஹைட்ரேட் உணவுகள்
உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு 300க்கும் மேல் அதிகமாகும் போது கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு சரியான அளவிற்கு வரும் வரை உணவில் கார்போஹைட்ரேட்டுகளை குறைப்பது அல்லது முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கார்போஹைட் உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்த கூடியவை.
அளவாக உண்ணுதல்
சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவை சாப்பிடும் போதும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அளவாக சாப்பிட வேண்டும். சரிவிகித உணவு முறையை பின்பற்ற வேண்டும். காய்கறிகள், நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அதிகமாகவும் கார்போஹைட்ரேட் உணவுகளை மிகக் குறைவாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முக்கிய சோதனை
நீங்கள் டைப் 1 நீரிழிவு நோயாளியாக இருந்தால் அல்லது உங்களுக்கு குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் வந்தால் இந்த சோதனை செய்ய வேண்டும். சிறுநீரில் கீட்டோன்கள் உள்ளதா என சோதனை செய்ய வேண்டும். சிறுநீரில் அதிக கீட்டோன்கள் அதனுடன்,உயர் இரத்த சர்க்கரை அளவுகள் இருந்தால் அதனை நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் என்பார்கள். இதுவே உயிருக்கு ஆபத்தான அவசரநிலையாகும். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சாப்பிட்டதும் நடை
உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் தொடர்ந்து உயர்வாக காணப்பட்டால் ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னும் 10 முதல் 20 நிமிடங்கள் நடப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றால் மெதுவாக நடக்கலாம். இப்படி நடப்பது இரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவுகள் உயர்வது குறைக்க உதவுகிறது.
மிதமான பயிற்சி
உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில் உடற்பயிற்சிக்கு கணிசமான பங்குள்ளது. நீங்கள் மிதமான பயிற்சிகளை செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். நடைப்பயிற்சி அல்லது மெதுவாக ஓடுதல் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.