- Home
- உடல்நலம்
- Angiogram: ஆஞ்சியோகிராம் என்றால் என்ன? அது யாருக்கெல்லாம் எடுக்கப்படும்? எப்போது எடுக்க வேண்டும்?
Angiogram: ஆஞ்சியோகிராம் என்றால் என்ன? அது யாருக்கெல்லாம் எடுக்கப்படும்? எப்போது எடுக்க வேண்டும்?
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஞ்சியோகிராம் என்றால் என்ன? அது எவ்வாறு செய்யப்படுகிறது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனை என்றால் என்ன?
ஆஞ்சியோகிராம் பரிசோதனை என்பது உடலின் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் சுருக்கங்கள் அல்லது அசாதாரணங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிய மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான மருத்துவ பரிசோதனை ஆகும். இது பொதுவாக இதய ரத்தக் குழாய்கள் (கரோனரி தமனிகள்) தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டாலும் மூளை, கை, கால் நுரையீரல் உள்ளிட்ட மற்ற பகுதிகளின் இரத்தக் குழாய்களையும் ஆராய பயன்படும். ஆஞ்சியோகிராம் என்பது எக்ஸ் கதிர்களை பயன்படுத்தி இரத்தக் குழாய்களின் தெளிவான படங்களை எடுக்கும் செயல்முறையாகும். இந்த ஆஞ்சியோகிராம் யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படும்? அது எவ்வாறு செய்யப்படுகிறது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்கு பரிந்துரைக்கப்படும்?
ஆஞ்சியோகிராமானது ஒரு நோயாளிக்கு இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் அறிகுறிகள் தெரியும் பொழுது பரிந்துரைக்கப்படலாம். இதய இரத்தக் குழாய்களைப் பொருத்தவரை பின்வரும் சூழ்நிலைகளில் இது பரிந்துரைக்கப்படலாம். மாரடைப்புக்கான அறிகுறிகளான கடுமையான மார்பு வலி, மூச்சுத்திணறல், இடது கை, தோள்பட்டை, கழுத்து அல்லது தாடையில் பரவும் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது, ஓய்வு எடுக்கும் பொழுது கூட மார்பில் வலி ஏற்படுவது அல்லது ஏற்கனவே மார்பில் இருக்கும் வலி மோசம் அடைவது, மாரடைப்பு ஏற்பட்ட பிறகு சேதத்தை தடுக்க அல்லது அடைப்புகளை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சையின் பொழுது அதன் தேவையை மதிப்பிடுவதற்கு ஆஞ்சியோகிராம் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆஞ்சியோகிராமில் கண்டறியப்படும் பிரச்சனைகள்
உடல் மருத்துவ பரிசோதனையின் போது எலக்ட்ரோ கார்டியோகிராம் என்று அழைக்கப்படும் இசிஜியில் இதயத்துடிப்பு அல்லது மின் செயல்பாட்டில் அசாதாரணங்களில் இருந்தாலோ, எக்கோ கார்டியோகிராம் என்று அழைக்கப்படும் இதய செயல்பாடு அல்லது அமைப்பில் சிக்கல்கள் இருந்தாலோ, உடற்பயிற்சியின் போது இதயத்தின் இரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டாலோ, பிறப்பிலேயே இதயத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் உள்ள அசாதாரணங்களை கண்டறியவும், இதய வால்வுகளில் பிரச்சனைகள், மார்பில் ஏற்படும் காயம் அல்லது வேறு ஏதேனும் இரத்தக்குழாய் சேதம் இருப்பது கண்டறியப்பட்டாலோ ஆஞ்சியோகிராம் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம் பலவீனமான பகுதிகளை கண்டறியவும், நீரிழிவு, இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, புகை பிடித்தல், குடும்பத்தில் இதய நோய் வரலாறு உள்ளிட்டவர்களுக்கும் ஆஞ்சியோகிராம் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆஞ்சியோகிராம் எப்படிசெய்யப்படுகிறது?
ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு முன்னர் அயோடின் கலந்த ஒரு சிறப்பு சாயம் (கான்ட்ராஸ்ட் டை) இரத்தக் குழாய்களுக்குள் செலுத்தப்படுகிறது. எக்ஸ் ரே படத்தில் சாயம் பாய்ந்த இரத்தக் குழாய்கள் தெளிவாக தெரிவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. பொதுவாக தாடை அல்லது மணிக்கட்டில் உள்ள சிறிய இரத்தக் குழாயின் வழியாக ஒரு மெல்லிய நெகிழ்வான குழாய் செலுத்தப்படுகிறது. இது இதயத்தை நோக்கியோ அல்லது பரிசோதிக்கப்பட வேண்டிய இரத்தக்குழாயின் அருகிலோ கவனமாக செலுத்தப்படுகிறது. சாயம் செலுத்தப்பட்ட பிறகு இரத்தக் குழாய்கள் வழியாக சாயம் பாயும் பொழுது எக்ஸ் கதிர்கள் எடுக்கப்பட்டு கணினியில் சேமிக்கப்படுகின்றன. இது இரத்த ஓட்டத்தின் பாதையின் அடைப்புகள் அல்லது பிற அசாதாரணங்களையும் தெளிவாக காண உதவி புரிகிறது. இந்த செயல்முறையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் ஆஞ்சியோகிராம் என்று அழைக்கப்படுகின்றன.
வேறு எந்த இடங்களை பரிசோதிக்க ஆஞ்சியோகிராம் பயன்படுகிறது?
ஆஞ்சியோகிராம் என்பது ஒரு ஆக்கிரமிப்பு பரிசோதனை (Invasive) என்பதால் முதலில் மருத்துவர்கள் எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ ஸ்ட்ரெஸ் டெஸ்ட் போன்ற ஆக்கிரமிப்பு இல்லாத பரிசோதனைகள் (Non Invasive) செய்வார்கள். அந்த பரிசோதனைகளின் முடிவுகள் இரத்தக்குழாய் அடைப்பை அல்லது வேறு ஏதேனும் தீவிர பிரச்சனைகளை குறிப்பிட்டால் மட்டுமே ஆஞ்சியோகிராம் பரிந்துரைக்கப்படும். இதய இரத்தக்குழாய்களை பரிசோதிப்பது கரோனரி ஆஞ்சியோகிராம் எனப்படுகிறது. இது மட்டுமில்லாமல் உடலின் பிற பகுதிகளின் இரத்தக்குழாய்களை பரிசோதிக்கவும் ஆஞ்சியோகிராம் பரிந்துரைக்கப்படுகிறது. மூளை, சிறுநீரகம், கை, கால்களில் உள்ள இரத்தக் குழாய்களையும் ஆஞ்சியோகிராம் மூலமாக பரிசோதிக்க முடியும்.
மருத்துவர் ஆலோசனையைப் புறக்கணிக்காதீர்கள்
ஆஞ்சியோகிராம் பரிசோதனை என்பது இரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவும் ஒரு முக்கிய பரிசோதனையாகும். ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்குப் பின்னர் ஆஞ்சியோ பிளாஸ்டி (பலூன் மற்றும் ஸ்டென்ட் மூலம் அடைப்பை நீக்குதல்) அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான கண்டறியும் கருவியாகும். மருத்துவர்கள் உங்களின் இரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பரிந்துரைப்பார். எனவே தாமதமில்லாமல் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

