BP Tablets: ஒரே நேரத்தில் 2 பிபி மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்ப உடனே இதை படிங்க!
BP Tablets: பிபி மாத்திரை போட மறந்தாலும், ஒரே நேரத்தில் 2 பிபி மாத்திரை போட்டாலும் ஆபத்தை விளைவிக்கும். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சொல்வதை விரிவாக பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் 2 பிபி மாத்திரை சாப்பிடுறீங்களா?
இன்றைக்கு பல பேருக்கு இருக்கிற பெரிய பிரச்சினை உயர் இரத்த அழுத்தம் (High BP) ஆகும். இதைக் கட்டுப்பாட்டில் வைக்கப் பலரும் தினமும் மாத்திரை சாப்பிடுகிறார்கள். இரத்த அழுத்தம் அதிகமானால் அது இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு என்று பல பெரிய பிரச்சினைகளைக் கொண்டுவந்துவிடும்.இரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்துக் கொண்டால்தான் இதயமும் இரத்த நாளங்களும் சீராக வேலை செய்யும்.
சிலருக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கத் தினமும் மாத்திரை போடுவது ரொம்ப அவசியமாகும். வெறும் உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை வைத்து மட்டுமே இரத்த அழுத்தத்தைக் குறைத்துவிட முடியாது. நாள்பட்ட இரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறவர்களுக்கு இது அடிக்கடி நடக்கும்.
மாத்திரைகள்தான் இரத்த நாளங்களைத் தளரச் செய்தும், இரத்தத்தின் அளவைக் குறைத்தும், இதயத் துடிப்பைச் சீராக்கியும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன. அதனால, மருத்துவர் கொடுத்த மாத்திரையைத் தினமும் சரியாகச் சாப்பிட வேண்டும். ஆனாலும், சில நேரங்களில் வேலை அவசரத்தில் மாத்திரை போட மறந்துவிடுவோம்.
மாத்திரை போட மறந்தால் உடலில் என்ன நடக்கும்?
ஒருமுறை இரத்த அழுத்த மாத்திரை போட மறந்தால், இரத்த அழுத்தம் கொஞ்ச நேரத்திற்கு அதிகரிக்கும். இதனால் பெரிய ஆபத்து எதுவும் உடனே வந்துவிடாது. ஆனால், அடிக்கடி மாத்திரை போட மறந்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்குத் தலைவலி, தலைச்சுற்றல், நெஞ்சுப் படபடப்பு கூட வரலாம்.
நிறைய பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் ரொம்ப நார்மலா இருப்பாங்க. ஆனால், தொடர்ந்து மாத்திரை போடாமல் விட்டால், இரத்த அழுத்தம் அதிகமாகி இரத்த நாளங்களைப் பாதித்துவிடும். நீண்ட நாளாக இரத்த அழுத்தம் அதிகமாகவே இருந்தால் சிறுநீரகம், கண்கள், மூளை எல்லாம் பாதிக்கப்படும். மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்குரிய ஆபத்து ரொம்ப அதிகம்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மாத்திரை போட மறந்தது ஞாபகம் வந்த உடனே, அந்த மாத்திரையைச் சாப்பிட்டுவிடுங்கள்.
ஒருவேளை மாத்திரை போட மறந்துவிட்டோம் என்று, அடுத்த வேளைக்கு சேர்த்து இரண்டு மாத்திரைகளாகச் சாப்பிடக் கூடாது.
தொடர்ந்து சில நாட்களாக நீங்கள் மாத்திரை போட மறந்துவிட்டிருந்தால், உடனே மருத்துவரைப் போய் பார்க்கவும்.
வீட்டிலிருக்கும்போதே இரத்த அழுத்தத்தைக் கண்டறியும் கருவியை (BP Monitor) வைத்துச் செக் செய்து பார்க்கவும்.
எப்போது உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்?
நெஞ்சில் ரொம்ப அழுத்தமாகவோ அல்லது கடுமையான வலியோ இருந்தால்.
திடீரென்று மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருந்தால்.
தாங்க முடியாத அளவிற்குத் கடுமையான தலைவலி வந்தால்.
முகம் அல்லது உடம்பின் ஒரு பக்கம் மரத்துப் போனால் அல்லது பலவீனம் அடைந்தால்.
திடீரென்று கண் பார்வை மங்கலானால் அல்லது பேசுவதற்குச் சிரமப்பட்டால்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு வேளை மாத்திரை போட மறந்தால் மருத்துவர் சொன்ன அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். அடுத்த வேளை மாத்திரை போடும் நேரம் வரவில்லை என்றால், ஞாபகம் வந்த உடனே மாத்திரையைச் சாப்பிட்டுவிடுங்கள். ஆனால், எந்தக் காரணத்திற்காகவும் ஒரே நேரத்தில் இரண்டு மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

