தர்பூசணி விதையை இனி தூக்கி போடாதீங்க; அம்புட்டு நன்மைகள் இருக்கு!
தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

Watermelon Seeds: The Truth About Nutrients & Safety : வெயில் காலம் வந்தாலே பல பகுதிகளிலும் சாலையோரமாக தர்பூசணி பழம் விற்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சில தர்ப்பூசணி ஜூஸ் கடைகளும் பல இடங்களில் இருக்கும். காரணம் கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்க தர்பூசணி நமக்கு பெரிய அளவில் உதவி செய்கின்றது. ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பொதுவாக தர்ப்பூசணி பழத்தை நன்மைகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம. ஆனால் அதன் விதைகளில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகளை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். எனவே இந்த பதிவில் தர்பூசணி பழத்தின் விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தர்பூசணி விதையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
தர்பூசணி விதையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். புரதம், பொட்டாசியம், துத்தநாகம் ஒமேகா-3கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் தர்பூசணி பழத்தில் காணப்படுகின்றன. இந்த விதைகளை நீங்கள் சிற்றுண்டியாக கூட சாப்பிடலாம். மேலும் இந்த விதையில் கலோரிகள் அதிகளவில் இல்லை. ஆனால் இந்த விதைகளில் அதிகளவு அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்கிஜேனற்ற பண்புகள் காணப்படுகின்றன. எனவே பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க தர்பூசணி விதைகள் உதவுகிறது. சரி இப்போது தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
தர்பூசணி விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக அதில் இருக்கும் மெக்னீசியம் உயர் ரத்த அளவை சாதாரணமாக வைத்திருக்க பெரிதும் உதவும். இது தவிர இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் காரணமாக தான் தர்பூசணியை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
தர்பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அருமருந்தாகும். இந்த விதையில் இருக்கும் வைட்டமின் பி பல பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. மேலும் இந்த விதைகள் வயிற்றை நீண்ட நேரம் நிரப்ப உதவுகிறது. எனவே நீங்கள் இந்த விதையை உங்களது உணவில் பல வழிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எலும்பை பலப்படுத்தும்
வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவது பொதுவானது. ஆனால் இப்போதெல்லாம் மாறி வரும் வாழ்க்கை முறையால் இளைஞர்கள் மத்தியில் மூட்டு வலி பிரச்சனை அதிகரிக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் உங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். தர்ப்பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது :
சர்க்கரை நோயாளிகளுக்கு தர்பூசணி விதைகள் வரப்பிரசாதமாகும். அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அவை ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் நிச்சயமாக தர்பூசணி விதைகளை உங்களது உணவின் ஒரு பகுதியாக இன்றே ஆக்குங்கள்.
முடி உதிர்வை தடுக்கும்:
தர்பூசணி விதையில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளதால் அவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தர்பூசணி விதைகள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
தர்பூசணி விதையை சேமிக்கும் முறை:
தர்பூசணி விதைகளை நன்கு உலர்த்தி பிறகு வறுத்து காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து சேமிக்க வேண்டும். இந்த விதைகளை சிறிய அளவில் எடுத்து சாலட் அல்லது உலர் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம். ஒருவேளை நீங்கள் அதை விதையாக சாப்பிட விரும்பவில்லை என்றால், பொடி செய்து உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.