கர்ப்பிணிகளே! பிபி ஓவரா ஆகுற அறிகுறிகள் இதுதான்!! கவனமா இருங்க
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம்
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆகவே ஒவ்வொரு மாற்றத்தையும் கவனமாக கண்காணிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் வரும் உயர் இரத்த அழுத்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இது நாள்பட்ட உயர் ரத்த அழுத்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் கர்ப்பத்தின் 20 வாரங்களுக்கு பிறகு இரண்டாம் பாதியில் தொடங்கும். மேலும் கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் வந்தால் உடல் பல வழிகளில் பாதிக்கப்படும். அதை சரியாக கவனிக்கவில்லை என்றால் கரு சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வந்தால் தோன்றும் சில எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கடுமையான தலைவலி :
கர்ப்ப காலத்தில் கடுமையான தலைவலி வந்தால் அசல்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆகவே கர்ப்ப காலத்தில் ஓய்வெடுத்து பிறகும் தலைவலி அதிகமானால் உடனே மருத்துவரை அணுகவும்.
2. கணுக்கால் வீக்கம் :
கர்ப்ப காலத்தில் வீக்கம் ஏற்படுவது இயல்பானது. ஏனெனில் கருவின் வளர்ச்சியை மேம்படுத்த உடலானது கூடுதல் திரவத்தை உருவாக்குவதால் தான் இப்படி நிகழ்கிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் வீக்கம் பொதுவானது என்றாலும், உடலில் உயர் இரத்த அழுத்தம் அதிகரித்தாலும் இந்த அறிகுறிகள் தோன்றும்.
3. எடை அதிகரித்தல் :
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது பொதுவானது. ஆனால் ஒவ்வொரு காலங்களிலும் குறிப்பிட்ட அளவில் கணிச்சிமாக தான் எடை அதிகரிக்க வேண்டும். அதுதான் நல்லது. ஒருவேளை ஒரே நேரத்தில் எடை அதிகரித்தால், அது நல்லதல்ல. இது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும்.
4. குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் :
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது அடிக்கடி சிறுநீர் கழித்தால் கூட சிறுநீர் சிறிதளவு மட்டுமே போகும். இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் அசால்டாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. பார்வை குறைபாடு :
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது பார்வை மங்கலாக தெரியும். சிலருக்கு பார்வை ரெட்டையாக கூட தெரியும். எனவே இந்த பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் நல்லது.
6. குமட்டல் மற்றும் வாந்தி :
கர்ப்ப காலத்தில் குமட்டல் மற்றும் வாந்தி வருவது பொதுவானது என்றாலும், உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது அது அதிகமாகவே வரும். தொடர்ந்து வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
7. வயிற்று வலி :
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது வலது பக்க மேல் வயிற்று வலி அல்லது வயிற்று சுற்றி வலி ஏற்படும். எனவே உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு சி பிரிவின் மூலமாக தான் குழந்தை பெற்றேடுக்க முடியும். ஆகவே கர்ப்பிணிகள் உயர் இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டால் ஆரம்பத்திலேயே அதை கட்டுப்படுத்தி விடலாம்.

