எப்பவும் சோர்வா இருக்கா? புரதச்சத்து குறைபாடா இருக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்க தெம்பா ஆகிடுவிங்க!
Protein foods: எல்லா ஊட்டச்சத்துகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால் தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஏதேனும் ஒரு சத்து குறைபாடு ஏற்பட்டாலும் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சில நேரங்களில் கடினமான வேலைகளை செய்யாத போதும் உடல் சோர்வாக இருக்கும். சின்ன வேலைகளை கூட செய்ய முடியாது. சிலர் இதனை இதயம் தொடர்பான நோய்களின் அறிகுறி என நினைத்துக் கொள்வர். ஆனால் புரதசத்து குறைபாட்டினாலும் இது மாதிரியான சோர்வு ஏற்படக்கூடும். தசைகள் வலுப்பெற புரதச்சத்து இன்றியமையாதது. சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
புரதச்சத்தை நாம் சில உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். புரதச்சத்தை எடுத்துக் கொள்வது ஒவ்வொரு தனி நபருக்கும் வேறுபடும். ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் அளவில் புரதச்சத்து அவசியம். உதாரணத்திற்கு ஒருவர் 60 கிலோ எடை கொண்டவர் எனில் அவருக்கு 48கி புரதச்சத்து அவசியம் தேவை. அதற்கு உதவும் உணவுகளை இங்கு காணலாம்.
பிஸ்தா
பிஸ்தாவில் 9 வகையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ஒரு அவுன்ஸ் பிஸ்தாவில் 6 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது. இதில் வைட்டமின் பி6, பாஸ்பரஸ், தையமின், தாமிரம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன. இதில் ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் மிகுந்து காணப்படுகிறது.
முட்டை
நாம் 100 கிராம் முட்டை எடுத்து கொள்ளும்போது 13 கி புரதம் கிடைக்கும். ஒரு முட்டையில் 6கி புரதம் உள்ளது. முட்டையில் உள்ள வெள்ளை கருவில் அதிகமான புரதம் உள்ளது. நல்ல உடலுழைப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு முட்டையை உண்ணலாம். உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் செய்யாதவர்கள் என்றால் வாரத்தில் 3 நாள்கள் முட்டை எடுக்கலாம்.
இதையும் படிங்க; சீலா, இறால், நெய்தோலி, சுறா கருவாடு மருத்துவ பலன்கள் ஏராளம்! யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
சிக்கன்
சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது. ஆனால் எண்ணெய்யில் பொறித்து உண்பதால் உடலுக்கு நன்மை இல்லை. நாட்டுக்கோழியை வாங்கி நீராவியில் வேகவிட்டு உண்ணலாம். சாலட் மாதிரி செய்தும் சாப்பிடலாம். மசாலா இல்லாமல் உண்பது சிலருக்கு கடினம் தான். ஆனாலும் புரதம் அத்தியாவசியமாக வேண்டும் என நினைப்பவர்கள் அப்படி எடுத்து கொள்ளலாம்.
யோகர்ட், சீஸ்
பால், தயிர், சீஸ் ஆகியவை புரதம் அதிகம் கொண்டுள்ளன. இதில் கொழுப்பும் அதிகமுள்ளது. பால் பொருள்களில் புரதம் இருந்தாலும் கொஞ்சம் மிதமாக உண்ணுங்கள்.
மீன்
நரம்பு மற்றும் இதய பிரச்சனைகளுக்கு மீனால் நல்ல நன்மை கிடைக்கும். சால்மனில் அதிகளவில் புரதம் உள்ளது. மீன் தொடர்ந்து உண்பவர்களுக்கு புரதம் அதிகமாக கிடைக்கிறது.
சோயா பீன்ஸ்
குறிப்பிட்ட இடைவெளியில் சோயா பீன்ஸை சமைத்து உண்ணலாம். சோயா பால், சோயா சீஸ் ஆகியவற்றை உண்ணும்போது 100 கிராமிற்கு 28.6 கிராம் புரதம் கிடைக்கும்.
இதையும் படிங்க; சிறுநீரகத்துல பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தவறாம எடுத்துக்கோங்க!