- Home
- உடல்நலம்
- Leg Pain and High Cholesterol : அடிக்கடி கால் வலிக்குதா? அப்ப கொலஸ்ட்ரால் கூட காரணமா இருக்கும்! அறிகுறிகளை பாருங்க
Leg Pain and High Cholesterol : அடிக்கடி கால் வலிக்குதா? அப்ப கொலஸ்ட்ரால் கூட காரணமா இருக்கும்! அறிகுறிகளை பாருங்க
அதிகப்படியான கொலஸ்ட்ரால் கால் வலி அல்லது தசைப்பிடிப்பை எப்படி ஏற்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Leg Pain and High Cholesterol
நீண்ட நேரம் நின்றாலோ, நடந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ அல்லது அதிக நேரம் வேலை செய்தாலோ போன்ற பல காரணங்களால் கால் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படுகிறது என்று நாம் அதை அப்படியே விட்டுவிடுகிறோம். ஆனால், நம்முடைய உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அடிக்கடி கால் வலி பிரச்சனை ஏற்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இந்த பதிவில் அதிகப்படியான கொலஸ்ட்ராலானது கால் வலியை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
அதிக கொலஸ்ட்ராலும், கால் வலியும்..
நம்முடைய உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க இரத்த நாளங்களின் உட்புற சுவர்களில் அது படிந்து பிளேக் என்னும் படிவங்களை உருவாக்கி, நாளடைவில் இரத்த நாளங்களை சுருக்கி இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதை Atherosclerosis என்று அழைப்பர்.
இந்த பாதிப்பானது கால்களுக்கு செல்லும் தமனியில் ஏற்படும் போது கால்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தமாது போதுமான அளவு கிடைக்காமல் போகும் இதன் விளைவாக நடந்தாலோ மாடி படியில் ஏறினாலோ கால்களில் வலி அல்லது தசை பிடிப்பை ஏற்படுத்தும். இது தவிர மரத்துப்போதல், சோர்வு போன்ற அறிகுறிகளும் தெரியும்.
அதிக கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி?
ஆரோக்கியமான உணவுகள் :
நிறைவுற்ற மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இது தவிர பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பாமாயில், வெண்ணெய் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மீன், நட்ஸ்கள் மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
தினசரி உடற்பயிற்சி :
தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியானது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
புகைப்பிடித்தலை நிறுத்துங்கள் :
புகை பிடித்தல் இரத்த நாளங்களை பாதிப்பது மட்டுமல்லாமல், Atherosclerosis அபாயத்தையும் அதிகரிக்க செய்யும் எனவே உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்தி விடுங்கள்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் :
அதிகப்படியான உடல் எடை கொலஸ்ட்ரால் அளவை மேலும் அதிகரிக்க செய்யும். எனவே ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்
நினைவில் கொள் :
அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க மேலே குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் பின்பற்றியும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கவும்.