- Home
- உடல்நலம்
- Kidney Health : ஒரு நாளைக்கு உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்? சிறுநீரகங்களை பாதுக்காக்க எளிய டிப்ஸ்
Kidney Health : ஒரு நாளைக்கு உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்? சிறுநீரகங்களை பாதுக்காக்க எளிய டிப்ஸ்
சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது? சிறுநீரகம் செயலிழப்பின் அறிகுறிகள் என்ன? தடுக்கும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

How to prevent kidney failure
உடல் உள்ளுறுப்புகளில் முக்கியமான உறுப்பாக சிறுநீரகங்கள் விளங்கி வருகிறது. சிறுநீரகப் பிரச்சனைகள் நம்முடைய வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுகின்றன. நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதுபோன்ற பிற காரணிகளால் ஏற்படும் சிறுநீரகப் பிரச்சனைகளை நம்மால் தடுக்க முடியும். ஆனால் மரபியல் ரீதியாக ஏற்படும் சிறுநீரகப் பிரச்சனைகளை தடுக்க முடியாது. சிறுநீரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்க வேண்டும்?
சிறுநீரகங்களை பாதுகாப்பதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது நம் உடலுக்கு எது சிறந்தது என்பதை அறிந்து உண்ண வேண்டும். சிறுநீரக ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது உப்பு. உப்பை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. அதன்படி பார்த்தால் ஒரு சிறிய ஸ்பூன் அளவிலான உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் சாப்பிடும் அப்பளம், ஊறுகாய், பிரெஞ்சு ப்ரைஸ், சிப்ஸ், பிஸ்கட் ஆகியவை உடலுக்கு தேவைக்கு அதிகமான உப்பை வழங்குகின்றன. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலுக்கு மிகுதியாக கிடைக்கும் உப்பை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைக்க வேண்டும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஒருவர் தேவையான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். சிறுநீரக கல் அல்லது கட்டிகள் இருப்பவர்கள் மருந்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். ஆனால் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்ட பின்னர் சரி செய்கிறேன் என்கிற பெயரில் அதிக அளவு தண்ணீர் குடிக்கக்கூடாது. மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்படும். ஒரு நாளில் இடைவெளி விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக குடிக்கக்கூடாது. ஒரு நபர் சாதாரண நாட்களில் 3 லிட்டரும், வெயில் காலங்களில் நான்கு லிட்டர் வரையும் தண்ணீர் அருந்தலாம்.
கிரியேட்டினின் பரிசோதனை
சிறுநீரகப் பிரச்சனை பெரும்பாலும் அறிகுறிகளை காட்டாது. சிறுநீரில் புரதம் வெளியேறினால் நுரை, நுரையாக வரலாம். கல் இருப்பவர்களுக்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்படலாம். சிறுநீரக செயலிழப்பில் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கால் வீக்கம் ஏற்படலாம். தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வது, வலி நிவாரண மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆகியவை சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணங்கள். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை கிரியேட்டினின் அளவை வைத்தே கூற முடியும். கிரியேட்டினின் அளவு அதிக அளவில் இருந்தால் அவர் சிறுநீரக செயலிழப்பில் இறுதியில் நிலையை அடைந்து விட்டார் என்பது அர்த்தம். அதாவது சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்து விட்டதாகவும், டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தீர்வாக இருக்கும்.
அல்ட்ரா சவுண்டு மற்றும் பிற பரிசோதனைகள்
சிறுநீரகங்கள் செயலிழக்காமல் இருப்பதற்கு நாம் சிலர் ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அல்ட்ரா சவுண்டு மூலமாக சிறுநீரகங்கள் எப்படி இருக்கிறது? அதன் அளவு சரியாக இருக்கிறதா? சிறுநீரகங்களில் கல் அல்லது கட்டி உள்ளதா? என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு நீரிழிவு நோய் கண்டுபிடிக்கும் பொழுதே சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே நீரிழிவு பரிசோதனையை அடிக்கடி மேற்கொள்வது சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும். சிறுநீரக ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள ஆல்புமின் அதாவது புரதம் வெளியேறுவது, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு, நீரிழிவு, குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகப் பிரச்சனை இருக்கிறதா என்கிற ஐந்து அம்சங்களை நினைவில் கொண்டு இந்த பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.
சமச்சீர் உணவுகளை சாப்பிட வேண்டும்
நீரிழிவு, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேலையில் சரி விகித உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களை தடுக்க பொட்டாசியம் எடுக்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சனை வந்துவிட்டால் பொட்டாசியம் சம்பந்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும். உப்பை முடிந்த அளவு குறைக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவுகளையும், கார்போஹைட்ரேட் உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரை அடக்கி வைத்தல் கூடாது. போதுமான அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரை வெளியேற்ற வேண்டும். வெயிலில் அதிகமாக வேலை பார்க்கும் நபர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தி, சிறுநீரை முறையாக வெளியேற்றினால் சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாது.

