footwear tips: கால் எலும்புகளை பாதுகாக்க எந்த மாதிரி செருப்புகளை அணியலாம்?
கணுக்கால், முதுகு வலி வந்த பின்பே நம்மில் பலர் காலணிகளைப் பற்றி யோசிக்கிறோம். அழகாகவும் மலிவாகவும் இருக்கும் செருப்புகள் ஆரோக்கியமானவையா என்று பார்ப்பதில்லை. இந்த அலட்சியம் நம் கால் எலும்புகளை மெதுவாகச் சேதப்படுத்திவிடுகிறது.

வளைவுக்குக் கொடுங்க முக்கியத்துவம்;
நம் உள்ளங்காலின் நடுப்பகுதி லேசாக வளைந்து (Curve) இருக்கும். பிளாட்டான (Flat) செருப்புகளைத் தவிர்த்து, இந்த வளைவுக்குப் பொருத்தமாக 'ஆர்ச் சப்போர்ட்' உள்ள செருப்புகளை அணியுங்கள். இது நடக்கும்போது உடல் எடையை கால் முழுவதும் சமமாகப் பிரித்து, குதிங்கால் எலும்பில் (Heel bone) அதிக அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.
பஞ்சு போன்ற பாதங்கள்;
செருப்பின் உட்பகுதி (Insole) கடினமாக இல்லாமல், மெமரி ஃபோம் அல்லது குஷனிங் (Cushioning) வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.நீங்கள் தரையில் கால் வைக்கும் போது ஏற்படும் அதிர்வுகளை (Shock absorption) இந்த குஷன்கள் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் முழங்கால் மூட்டு மற்றும் கணுக்கால் எலும்புகள் தேய்மானமடைவது தடுத்து நிறுத்தப்படும்.
ஹீல்ஸ் அளவை மாத்துங்க:
முற்றிலும் தட்டையான (Flat) செருப்புகளும் தப்பு, 3 இன்ச் ஹை-ஹீல்ஸும் தப்பு! உங்கள் கால் எலும்புகளுக்கு மிக உகந்தது அரை இன்ச் முதல் ஒரு இன்ச் வரை தடிமனுள்ள 'வெட்ஜ்' (Wedge) அல்லது பிளாட்பார்ம் டைப் காலணிகள் தான். இது கணுக்காலுக்கு இயற்கையான சாய்வைக் கொடுத்து, அக்னிலிஸ் தசைநார்கள் (Achilles tendon) மற்றும் எலும்புகள் மீது தேவையில்லாத சுமை ஏறுவதைக் குறைக்கும்.
கூர்மையான செருப்புகளுக்கு 'நோ':
முன்னால் கூர்மையாக இருக்கும் (Pointed-toe) செருப்புகளைத் தவிர்த்து, விரல்கள் ஃப்ரீயாக இருக்கும்படி அகலமான முன்பகுதி (Wide toe box) கொண்ட செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். கூர்மையான செருப்புகள் விரல் எலும்புகளை ஒன்றன் மேல் ஒன்று நெருக்கி, 'பனியன்' (Bunion) எனப்படும் எலும்பு துருத்தல் பாதிப்பை ஏற்படுத்தும். அகலமான செருப்புகளே விரல் எலும்புகளுக்குப் பாதுகாப்பு!
கிரிப் ரொம்ப முக்கியம் :
வெறும் ஸ்லிப்பர்களாக (Slippers) அணியாமல், கணுக்காலுக்குப் பின்னால் பெல்ட் அல்லது ஸ்ட்ராப் (Back strap) இருக்கும் செருப்புகளைப் பயன்படுத்துங்கள். பேக் ஸ்ட்ராப் இல்லாதபோது, செருப்பு கழன்றுவிடக் கூடாது என்பதற்காக நம் கால் விரல் எலும்புகள் தரையை இறுக்கிப் பிடித்துக் கொண்டே நடக்கும். இது பாத எலும்புகளை விரைவில் சோர்வடையச் செய்யும். பேக் ஸ்ட்ராப் இருந்தால் கால்கள் ரிலாக்ஸாக இருக்கும்.

