டேட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தும் ஆண்கள்- காத்திருக்கும் பெரிய பிரச்சனை!
Dating Apps And Men's Mental Health : டேட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தும் ஆண்களுக்கு உளவியல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

டேட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தும் ஆண்கள்- காத்திருக்கும் பெரிய பிரச்சனை!
இன்றைய காலக்கட்டத்தில் டேட்டிங் ஆப்ஸ் பிரபலமாகி வருகிறது. மேட்ரிமோனி ஆப்ஸ் கூட டேட்டிங் ஆப்களின் இன்னொரு வெர்ஷன் தான். இந்த ஆப்களை பயன்படுத்தும் இளையதலைமுறையினர் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. டேட்டிங் ஆப் பயன்படுத்தும் ஆண்களுக்கு சுயமதிப்பு குறைதல், பதற்றம், மன அழுத்தம், உடலின் பிம்பம் குறித்த தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்..
டேட்டிங் ஆப்ஸ்
உலகளவில் டின்டர் ஆப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டின் படி 75 மில்லியனாகும். இந்த டேட்டிங் ஆப்களில் சிலர் தொடர்ந்து நிராகரிப்பை சந்திக்க நேரிடலாம். தொடர்ச்சியான நிராகரிப்பு யாருமே தன்னை விரும்பவில்லை என்ற எண்ணத்தை வரவழைக்கலாம். வாழ்வின் மீதான வெறுப்பு விரக்திக்கு வழிவகுக்கலாம். இதனால் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து கொள்ளுதல், தன்னிலை கண்டு நொந்து கொள்தல் என மனரீதியான போராட்டத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் சந்திக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு பின்னர் சிலர் தங்கள் நடை, உடை பாவனையை மாற்றி தங்களை வேறுமாதிரி காட்டிக் கொள்ள முனைகிறார்கள். தன்னைத் தானே நேசிக்கும் பழக்கம் மாறி தாழ்வு மனப்பான்மை சுழலுக்குள் சிக்கி கொள்கின்றனர். எதிர்மறை சிந்தனைகள் ஏற்படுகிறது. இது தவிர ஏற்படும் பாதிப்புகளை இந்தப் பதிவில் காணலாம்.
டேட்டிங் ஆப் சுயமதிப்பு குறைதல்:
டேட்டிங் ஆப்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த ஆப்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் தோற்றத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள். தங்களை சிறந்தவராகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்வார்கள். இதில் அவர்களுடைய இயல்பான சுயமதிப்பு குறையும் வாய்ப்புள்ளது. தோற்ற அதிருப்தி, உடல் மீதான விரக்தி ஆகிய சிக்கல்களை உண்டாக்கலாம்.
தோற்றமே மாயை!
டேட்டிங் ஆப்களில் உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உடல் பிம்பம் அழகாக இருக்க வேண்டும் என இளசுகள் மெனக்கெடுகிறார்கள். தங்கள் தோற்றத்தில் திருப்தி ஏற்படமல் மற்றவர்களுடன் ஒப்பிட டேட்டிங் ஆப் காரணமாகி விடுகிறது.
இதையும் படிங்க: Dating APPs: அழகிகளின் புகைப்படங்களை வைத்து தொழில் அதிபர்களுக்கு வலை; டேட்டிங் ஆப்பால் வந்த பகீர் சம்பவம்
டேட்டிங் ஆப் அங்கீகாரம் தேடல்:
தொடர்ச்சியான நிராகரிப்பை சந்திக்கும் ஆண்கள் அங்கீகாரத்திற்காக ஏங்க ஆரம்பிக்கிறார்கள். மேட்ரிமோனி அல்லது டேட்டிங் ஆப் எதுவாகினும் அதில் மேசேஜ் அல்லது ரிக்வெஸ்ட் வருவதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். தங்களுடைய சுயமதிப்பை படிப்படியாக இழந்து விடுகிறார்கள்.
பதற்றம் மற்றும் மன அழுத்தம்:
ஒரு ரிக்வெஸ்ட் வருகிறது என்றால் அந்த பயனரை கவர அதிகம் மெனக்கெடுகிறார்கள் ஆண்கள். தங்கள் உரையாடல் அந்த பயனரை கவர வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் தரலாம். எல்லா ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த பிரச்சனைகள் ஏற்படவில்லை என மறுக்கவும் முடியாது.
இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. உஷார்! உல்லாசமாக இருக்க நினைத்து.. வாழ்வை இழந்தவர்களின் நெஞ்சை உலுக்கும் நிஜ கதைகள்...
டேட்டிங் ஆப் என்ன செய்ய வேண்டும்?
ஆண்கள் தங்களுடைய நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். தங்களின் சுயபிம்பத்தை நேர்மறையான சிந்தனையால் ஊக்குவிக்க வேண்டும். மனம் திறந்த உரையாடல்களை பழக்கப்படுத்த வேண்டும். அதிகமாக டேட்டிங் ஆப் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். டேட்டிங் ஆப்களில் உள்ள எல்லோரும் தன்னை விரும்புவது சாத்தியமில்லை என்ற புரிதல் வர வேண்டும். தனக்கான நபர் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன்னை விரும்புவார் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே தாழ்வாக நினைப்பதை நிறுத்த வேண்டும். உங்களுடைய பதற்றத்தை கையாள முடியாவிட்டால் உளவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்