- Home
- உடல்நலம்
- Garlic Milk : நோய் எதிர்ப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை.. பூண்டு பால் செய்யும் அற்புத நன்மைகள்
Garlic Milk : நோய் எதிர்ப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை.. பூண்டு பால் செய்யும் அற்புத நன்மைகள்
பூண்டு பால் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒரு பானமாகும். இந்த பானத்தை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Garlic Milk and its Health Benefits
பூண்டின் மகத்துவம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. பூண்டை பயன்படுத்தி செய்யப்படும் பாலானது மிகவும் எளிய முறையிலும், அதே சமயம் சத்துக்களும் நிறைந்துள்ளது. பூண்டு பால் செய்வதற்கு ஒரு கப் பால், இரண்டு முதல் நான்கு வரையிலான பூண்டுப் பல், பனங்கற்கண்டு அல்லது தேன் - 1-2 டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் ஒரு சிட்டிகை எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டின் பற்களை தோலை உரித்து தட்டி சிறிதாக நறுக்கிக்கொண்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் தட்டி வைத்துள்ள பூண்டுகளை சேர்க்கவும்.
பூண்டுப்பால் செய்வது எப்படி?
பூண்டு நன்றாக வெந்து மென்மையாகும் வரை பாலை கொதிக்க வைக்க வேண்டும். பூண்டின் காரத்தன்மை பாலில் இறங்கும் வரை பால் நன்றாக கொதிக்க வேண்டும். இதற்கு சுமார் பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். பூண்டு நன்றாக வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைத்து பாலை இறக்க வேண்டும். பால் மிதமான சூட்டிற்கு வந்த பின்னர் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகலாம். பருகுவதற்கு முன்பு ஒரு கரண்டி கொண்டு பூண்டை நன்றாக மசித்து விட வேண்டும். பூண்டை வடிகட்டவோ அல்லது தூக்கி எறிதலோ கூடாது. பாலுடன் மென்று குடித்து விட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் அல்லது ரத்த கொதிப்பு இருப்பவர்கள் பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றை சேர்க்காமல் வெறும் பாலை அப்படியே குடிக்கலாம்.
பூண்டுப்பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
இந்தப் பாலை பெரியவர்கள் தாராளமாக குடிக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்னர் மருத்துவரையை கலந்தாலோசிக்க வேண்டும். பூண்டு பால் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பாரம்பரியம் பானமாகும். இதில் உள்ள அலிசின் மற்றும் பாலின் ஊட்டச்சத்துக்கள் இணைந்து பல நன்மைகளை அளிக்கிறது. மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவை பயன்படுத்தப்படுவதால் இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது. சளியை நீக்கி சுவாசப்பாதையை சீராக்குகிறது. சளி, இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு போன்ற கோளாறுகளையும் இது சரி செய்கிறது. பூண்டில் உள்ள சல்ஃபர் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. பருவ காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கின்றன.
கெட்ட கொழுப்புகளை நீக்கும் பூண்டுப்பால்
பூண்டு செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது. அஜீரணம், அமிலத்தன்மை, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை தடுக்கப்படுகிறது. ரத்த ஓட்டம் சீராவதால் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. பூண்டில் இயற்கையாக இருக்கும் வலி நிவாரணி பண்புகள் இடுப்பு வலி, மூட்டு வலி, கை கால் வலிகளை குறைக்கிறது. மேலும் பூண்டில் ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால் பூஞ்சை மற்றும் கிருமிகளுக்கு எதிராக போராடுகின்றன.
மருத்துவ ஆலோசனை தேவை
பூண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்பதால் தாய்மார்களும் இதை குடித்து வரலாம். பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஏற்கனவே உடல் நலப் பிரச்சினை உள்ளவர்கள் நீண்ட நாட்கள் நோய்களுக்கான மருந்து உட்கொள்பவர்கள் அல்லது பிற பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அதன் பின்னர் எடுத்துக் கொள்வது நல்லது.