Stroke : இளைஞர்களே எச்சரிக்கை.. செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் பக்கவாதம் வருமா?
செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Excessive Mobile Phone Usage Cause Stroke
தற்போதைய நவீன காலத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவர் கையிலும் ஆண்ட்ராய்டு போங்கள் தவழ்கின்றன. செல்போனை பயன்படுத்துவதால் பல பின் விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் செல்போன் பயன்படுத்தினால் பக்கவாதம் வரும் என்கிற கருத்துக்கள் நிலவி வருகிறது. செல்போன் பயன்படுத்துவதால் பக்கவாதம் வரும் என்கிற இதுவரை எந்த ஒரு உறுதியான அறிவியல் ஆய்வும் நிரூபிக்கப்படவில்லை. அதே சமயம் பக்கவாதத்தை ஏற்படுத்துவதற்கான மறைமுகமான வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பக்கவாதம் ஏற்படுவதற்கான மறைமுக காரணிகள்
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் உழைப்பு குறைந்து ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் அதிகரித்து, நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய காரணங்களால் பக்கவாதம் அபாயம் அதிகரிக்கலாம். 2021 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அதிக ஸ்கிரீன் நேரம் மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை காரணமாக பக்கவாத அபாயம் அதிகரித்து இருப்பதை கண்டறிந்துள்ளது.
தூக்கமின்மை
அதிக நேரம் செல்போன்கள் பயன்படுத்துவது தூக்கமின்மையை அதிகரிக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் தூங்காமல் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இது பல உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்துகிறது. சரியான தூக்கம் இல்லாததால் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் போன்ற பக்கவாத அபாய காரணிகள் அதிகரிக்கின்றன. மேலும் திரையில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒலி மெலோடனின் உற்பத்தியை குறைத்து தூக்கமின்மையை அதிகரிக்கலாம். எனவே இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தம் மற்றும் பதற்றம்
சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயங்களை மனதில் ஏற்றிக் கொள்வது, அளவுக்கு அதிகமாக யோசிப்பது, தேவையில்லாத விஷயங்களை மூளையில் சேகரிப்பது போன்ற காரணங்களால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. நாள்பட்ட மன அழுத்தம் பக்கவாத அபாயத்தை உயர்த்தலாம். மேலும் செல்போனை நீண்ட நேரம் வளைந்த நிலையில் பயன்படுத்துவது கழுத்து, தோள்பட்டை, முதுகு ஆகிய வலிகளை ஏற்படுத்தலாம். இது நேரடியாக பக்கவாதத்தை வரவழைக்காவிட்டாலும் முதுகு தண்டுவட குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.
பக்கவாதம் ஏற்படுவதற்கு நிரூபிக்கப்பட்ட அபாய காரணிகள்
பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, இதய நோய்கள், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, உடல் பருமன், புகைபிடித்தல், அதிகமாக மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மரபணு காரணிகள் அல்லது குடும்பத்தில் யாருக்காவது பக்கவாத பிரச்சனைகள் இருப்பது ஆகியவையே பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய மற்றும் நிரூபிக்கப்பட்ட அபாய காரணிகள் ஆகும். செல்போன் கதிர்வீச்சு நேரடியாக பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை.
செல்போன் பயன்பாட்டை குறையுங்கள்
இருப்பினும் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் உழைப்பின்மை தூக்கம் இன்மை மன அழுத்தம் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை பக்கவாத அபாயத்தை மறைமுகமாக அதிகரிக்கலாம் எனவே செல்போன் பயன்பாட்டை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற பழகிக் கொள்ளுங்கள் தினமும் இரவில் விரைவாக தூங்கச் செல்வது காலையில் சீக்கிரம் எழுந்து நடை பயிற்சி உடை பயிற்சி செய்வது சத்தான உணவை உட்கொள்வது ஏழு முதல் எட்டு மணி நேரம் போதுமான அளவு தூங்குவது மன அழுத்தத்தை குறைக்க யோகா தியானம் மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற பழக்க வழக்கங்கள் பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை குறைக்கின்றன.