- Home
- உடல்நலம்
- Cat: பூனையுடன் விளையாடுவீர்களா? இதை படியுங்க முதலில்..பூனை கீறுவதால் வரும் ஆபத்தான நோய்.!
Cat: பூனையுடன் விளையாடுவீர்களா? இதை படியுங்க முதலில்..பூனை கீறுவதால் வரும் ஆபத்தான நோய்.!
பூனைகளை பலரும் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதுண்டு. பூனை கீறல் மூலம் பரவும் நோய் பற்றியும், அதன் அபாயங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

‘பார்ட்டோனெல்லா ஹென்செலே’ பாக்டீரியா
பூனைகளுடன் விளையாடுவது பலருக்கும் பிடித்த ஒரு பொழுதுபோக்காகும். ஆனால் பூனையின் கீறல்கள் மூலம் ஒரு அபாயகரமான பாக்டீரியா மனிதர்களுக்குள் பரவுகிறது. பூனை கீறல் நோய் என்பது ‘பார்ட்டோனெல்லா ஹென்செலே’ என்கிற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது பூனைகள் கீறுவது, கடிப்பது அல்லது அதன் உமிழ்நீர் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது் ‘பார்ட்டோனெல்லா ஹென்செலே’ என்கிற பாக்டீரியா தான் இந்த நோய்க்கு முக்கிய காரணம். பெரும்பாலான பூனைகள் இந்த பாக்டீரியாவை எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் சுமந்து செல்கின்றன. பூனை குட்டிகள் தான் இந்த நோயை அதிகம் பரப்புகின்றன. ஏனெனில் பூனை குட்டிகளுடன் விளையாடும் பொழுது அவை கீறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
பூனை கீறல் நோய் பாதிப்பின் அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட பூனை மனிதர்களை கீறும்போது அல்லது கடிக்கும் பொழுது அதன் உமிழ்நீர் அல்லது நகத்தில் உள்ள பாக்டீரியா மனிதர்களின் உடலுக்குள் செல்கிறது அல்லது பாதிக்கப்பட்ட பூனையின் உமிழ்நீரானது மனிதர்களின் உடலில் உள்ள காயங்களில் படும்பொழுது தொற்றுகள் ஏற்படலாம். தொற்று ஏற்பட்ட பிறகு சில நாட்களில் இருந்து சில வாரங்கள் வரை அறிகுறிகள் தோன்றலாம். கீறல் அல்லது கடிபட்ட இடத்தில் சிறிய புடைப்பு அல்லது கொப்பளம் உருவாகும். இது சிவப்பாகவும் வலியுடனும் இருக்கும். கீறல் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள நிணநீர் முனைகளில் வீக்கம் ஏற்படும். உதாரணமாக கையில் கீறல் ஏற்பட்டால் அக்குள் பகுதிகளில் உள்ள நிணநீர் முனைகள் வீங்கி வலி உண்டாகும். இந்த வீக்கம் பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை கூட நீடிக்கலாம்.
தீவிர பாதிப்பின் அறிகுறிகள்
காய்ச்சல், சோர்வு, தலைவலி, பசியின்மை, தசை வலி ஆகியவை இந்த தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த நோய் தானாகவே குணமாகிவிடும். ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சில கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம். மூளையில் தொற்று ஏற்பட்டு குழப்பம், வலிப்பு, கடுமையான தலைவலி, நினைவாற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதய வால்வுகளில் தொற்று ஏற்படலாம். கண்களின் சவ்வில் வீக்கம் அல்லது கண் பார்வை பாதிப்பு ஏற்படலாம். கல்லீரல் அல்லது மண்ணீரல் ஆகிய உறுப்புகளில் தொற்று ஏற்பட்டு சீழ் அல்லது வீக்கம் ஏற்படலாம். சாதாரண அறிகுறிகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தானாக சரியாகிவிடும். சிறப்பு சிகிச்சை தேவையில்லை. வலி மற்றும் காய்ச்சலுக்கு வலி நிவாரணிகள் மற்றும் காய்ச்சல் மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.
தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்
நிணநீர் முனைகளில் வீக்கம் கடுமையாக இருந்தால், உடலில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆன்டிபயாட்டிக்ஸ்) போன்ற மருந்துகளை பரிந்துரைப்பார்கள். இந்த நோயிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கு பூனை குட்டிகளுடன் விளையாடும் பொழுது கவனமாக இருப்பது அவசியம். பூனை கீறினாலோ அல்லது கடித்தாலோ உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரால் அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பூனைகளின் நகங்களை சீராக வெட்டுவதன் மூலம் கீறல்களின் அபாயத்தை குறைக்கலாம். பூனைகளை அவ்வப்போது குளிக்க வைத்து சுகாதாரத்தை பேண வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பூனைகளுடன் பழகுவதை தவிர்ப்பது நல்லது. பூனை உங்கள் உடலை கீறி விட்டாலோ அல்லது கடித்து விட்டாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.