ரத்தசோகை முதல் கெட்ட கொழுப்பு வரை.. 'கருப்பு நிற உலர் திராட்சை' உண்பதால் நீங்கும் பிரச்சனைகள்!!
கருப்பு நிறத்தில் கிடைக்கும் உலர் திராட்சையை கண்டால் நிச்சயம் வாங்கி உண்ணுங்கள். இதில் நீங்கள் நினைத்து பார்க்காத பலன்கள் கொட்டி கிடக்கின்றன.
உலர் பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துகள் நிரம்பி காணப்படுகின்றன. உலர் பழங்கள் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும். இதில் உலர் திராட்சையை எடுத்து கொண்டால் குறைவான அளவில் தான் பதப்படுத்தப்படுகின்றன. அதாவது மற்ற உலர் பழங்களில் சேர்ப்பதை விட குறைவான பிரசர்வேட்டிவ் தான் உலர் திராட்சைகளில் சேர்க்கப்படும். அதனால் இதில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
செரிமானம் மேம்படும்
உலர் கருப்பு திராட்சையில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இதனை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். செரிமான கோளாறுகளான வாயு, வயிறு உப்சம், நெஞ்செரிச்சல் போன்றவை விரைவில் சரியாகும். உலர் கருப்பு திராட்சையில் அமில அழற்சி பண்புகள் காணப்படுவதால் பெருங்குடல் அழற்சி, புற்றுநோய் தொற்று ஆகிய ஆபத்துக்கள் குறையும்.
எலும்புருக்கி நோய்
கருப்பு உலர் திராட்சையில் கால்சியம், பொட்டாசியம் போன்ற எலும்புக்கு தேவையான சத்துக்கள் காணப்படுகின்றன. இது வயதாகும் போது உண்டாகும் எலும்பு தேய்மானம், எலும்பு துளைகள் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. தொடர்ந்து கருப்பு உலர் திராட்சையை உண்டு வருவதால் எலும்புகள் வலுவாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
கருப்பு உலர் திராட்சையில் அதிகமான இரும்புச்சத்து காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் 'வைட்டமின் சி' சத்து கருப்பு உலர் திராட்சையில் நிரம்பி காணப்படுகிறது. இதை உண்பதால் நம் உடலில் சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் பண்பு அதிகரிக்கிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவதுடன் கண், சரும ஆரோக்கியமும் மேம்படுகிறது. புற்றுநோய் பாதிப்புகளை குறைக்கிறது.
ரத்தசோகை
கருப்பு உலர் திராட்சையில் காணப்படும் இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் காணப்படும் ஊட்டச்சத்துகள் உடலில் பிற பாகங்களுக்கு ரத்தத்தின் மூலம் ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. தொடர்ந்து இதை உண்பதால் ரத்த சோகை குணமாவதோடு, ரத்த ஓட்டமும் மேம்படுகிறது.
நாள்தோறும் கொஞ்சம் கருப்பு திராட்சை உண்டு வந்தால் இதய நோயை வரும் முன் தடுக்கலாம். இதில் காணப்படும் பொட்டாசியம் பக்கவாத பாதிப்பை தவிர்க்க உதவுகிறது.
கொலஸ்டிரால்
கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும். இதன் காரணமாக இதயத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது. அதனால் இதய நோய்களின் ஆபத்தும் குறையும்.