- Home
- உடல்நலம்
- உணவு
- White Sorghum balls : வெள்ளை சோள உருண்டை சாதம்.. நாட்டு கோழி குழம்புடன் சாப்பிட்டால் அசத்தல் சுவை!
White Sorghum balls : வெள்ளை சோள உருண்டை சாதம்.. நாட்டு கோழி குழம்புடன் சாப்பிட்டால் அசத்தல் சுவை!
White Sorghum balls: வெள்ளைச் சோள உருண்டை சாதம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், சோளத்தை ஊறவைக்கும் முறை, வேகவைக்கும் பக்குவம், உருண்டை பிடிக்கும் செய்முறை மற்றும் தொட்டுக்கொள்ள ஏற்ற குழம்பு வகைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வெள்ளை சோள உருண்டை சாதம்
தினமும் அரிசி சாதம் சாப்பிட்டு அலுத்துப்போய்விட்டதா? உங்கள் மதிய உணவில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்து பாருங்கள். கிராமத்து மணமும், சோளத்தின் இயற்கையான சுவையும் நிறைந்த வெள்ளைச் சோள உருண்டை சாதத்தை ஒருமுறை செய்து பாருங்கள்.
வழக்கமான சாதத்துக்குப் பதிலாகச் சோளத்தை வேகவைத்து உருண்டைகளாகப் பிடித்துச் சாப்பிடும் இந்தப் பாரம்பரிய உணவு, சுவையில் மட்டுமல்லாமல் உணவுப் பழக்கத்தில் ஒரு நல்ல மாற்றத்தையும் தரலாம்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காரமான குழம்பு, மணமணக்கும் நாட்டுக்கோழிக் குழம்பு அல்லது எளிமையான காய்கறிக் குழம்பு இருந்தால், சாப்பாடு இன்னும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருள்கள்
- வெள்ளைச் சோளம் - 250 கிராம்
- தண்ணீர் - 4 டம்ளர் (தேவைக்கேற்ப கூடுதலாகச் சேர்க்கலாம்)
- சின்ன வெங்காயம் - 10
- கறிவேப்பிலை - சிறிதளவு
- நெய் - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை - படி 1
சோளத்தைச் சுத்தம் செய்யவும்
வெள்ளைச் சோளத்தில் உள்ள கல், தூசி போன்றவற்றை நீக்கி நன்றாகக் கழுவவும். பின்னர் 48 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இதனால் சோளம் மென்மையாகி வேகுவதற்கு உதவும்
படி 2
சோளத்தை அரைக்கவும்
ஊறவைத்த சோளத்தில் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் ரவை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
படி 3
சோளத்தை வேகவைக்கவும்
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும், கரைத்து வைத்துள்ள சோள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து தொடர்ந்து கிளறவும்.
இதனால் கட்டிகள் உருவாகாமல் இருப்பதுடன், அடிப்பிடிப்பதையும் தவிர்க்கலாம். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து, கலவை நன்றாக வெந்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை சுமார் 15 நிமிடத்திற்கு மூடி சமைக்கவும்
படி 4
தாளிப்பைத் தயாரிக்கவும்
ஒரு கடாயில் நெய் ஊற்றிச் சூடானதும் கறிவேப்பிலை , நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இந்த தாளிப்பை வேகவைத்த சோள சாதத்தில் சேர்க்கலாம்.
படி 5
உருண்டைகளாகப் பிடிக்கவும்
கலவை கையாளும் அளவுக்கு ஆறியதும் கைகளில் சிறிது எண்ணேய் தடவிக்கொண்டு, தேவையான அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். இப்போது சுவையான வெள்ளைச் சோள உருண்டை சாதம் தயார்.
படி 6
வெள்ளைச் சோள உருண்டை சாதத்துடன் என்ன தொட்டுக்கொள்ளலாம்?
- சின்ன வெங்காயக் குழம்பு
- பூண்டு புளிக்குழம்பு
- காய்கறிக் குழம்பு
- நாட்டுக்கோழிக் குழம்பு
படி 7
சுவையாகச் செய்ய உதவும் குறிப்புகள்
- சோளத்தை முன்கூட்டியே ஊறவைத்தால் அரைப்பதும் வேகவைப்பதும் எளிதாகும்.
- சோளத்தை மிகவும் நைசாக அரைப்பதற்குப் பதிலாகக் கொரகொரப்பாக அரைத்தால் பாரம்பரியமான பதம் கிடைக்கலாம்.
- உருண்டை பிடிக்கும்போது கலவை வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். மிகவும் சூடாக இருக்கும்போது கையாள வேண்டாம்.
- முதன்முறையாகச் செய்பவர்கள் தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமாக ஊற்றாமல், தேவைக்கேற்பச் சேர்ப்பது நல்லது.
பாரம்பரியச் சுவையை விரும்புவோருக்கு வெள்ளைச் சோள உருண்டை சாதம் ஒரு நல்ல உணவு மாற்றம். சின்ன வெங்காயக் குழம்பு அல்லது பூண்டு புளிக்குழம்புடன் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் சுவையை இன்னும் நன்றாக ரசிக்கலாம்.

