- Home
- உடல்நலம்
- உணவு
- Thanni Saaru : அரிசி கழுவிய நீரை இனி கீழே ஊற்றாதீங்க..தஞ்சாவூர் ஸ்டைல் தண்ணி சாறு செய்து பாருங்க!
Thanni Saaru : அரிசி கழுவிய நீரை இனி கீழே ஊற்றாதீங்க..தஞ்சாவூர் ஸ்டைல் தண்ணி சாறு செய்து பாருங்க!
Thanni Saaru : தஞ்சாவூர் ஸ்பெஷல் தண்ணி சாறு செய்வது எப்படி தெரியுமா? அரிசி கழுவிய நீர், முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து மணமணக்கும் பாரம்பரிய தண்ணி சாற்றை வீட்டிலேயே எளிதாகச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தஞ்சாவூர் ஸ்பெஷல் தண்ணி சாறு
மதிய உணவுக்கு சூடான சாதத்துடன் தொட்டுக்கொள்ள ஏதாவது காரசாரமாகவும், அதே நேரத்தில் எளிமையாகவும் வேணுமா? அப்படியானால், தஞ்சாவூர் ஸ்டைல் தண்ணி சாறு உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும். வீட்டில் இருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், முருங்கைக்கீரை போன்ற பொருட்களை வைத்தே மணக்க மணக்க இந்தச் சாற்றைத் தயார் செய்யலாம்.
குறிப்பாக, அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்திச் செய்யும் இந்தப் பாரம்பரிய கிராமத்து உணவு, அதன் எளிமையான செய்முறையாலும் தனித்துவமான சுவையாலும் கவனம் ஈர்க்கிறது. நீங்களும் ஒருமுறை இந்தத் தண்ணி சாற்றைச் செய்து பார்த்தால், வழக்கமான ரசத்திலிருந்து சற்று மாறுபட்ட சுவையை அனுபவிக்கலாம்.
தஞ்சாவூர் தண்ணி சாறு
தேவையான பொருட்கள்
- அரிசி கழுவிய நீர் - 3 கப்
- முருங்கைக்கீரை - 1 கப்
- சின்ன வெங்காயம் - 10 முதல் 12
- பூண்டு - 6 பல்
- பச்சை மிளகாய் - 2
- காய்ந்த மிளகாய் - 2
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
- கடுகு - 1\2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- எண்ணெய் - 1 முதல் 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தண்ணி சாறு செய்வது எப்படி? படி 1
வெங்காயம், பூண்டைத் தயார் செய்யவும்
சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கி, லேசாக நறுக்கிக்கொள்ளவும். பூண்டையும் தோல் நீக்கித் தட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாய் கீரி வைத்துக்கொள்ளவும். சீரகத்தையும் மிளகையும் ஒன்றாக லேசாக இடித்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் அவற்றின் மணம் சாற்றில் நன்றாக இறங்கும்.
படி 2
முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்யவும்
முருங்கைக்கீரையைத் தண்டிலிருந்து பிரித்து, இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு தனியாக வைத்துக்கொள்ளவும். முருங்கைக்கீரை தண்ணீரில் ஒட்டாது. இருப்பினும் தூசு மற்றும் பூச்சிகள் பாதுகாப்பிற்காக தண்ணீரில் அலசி எடுக்கவும்.
படி 3
அரிசி கழுவிய நீரைத் தயார் செய்யவும்
அரிசியைக் கழுவிய நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அரிசியில் உள்ள தூசி, அழுக்குகள் நீங்கும் வகையில் முதலில் கழுவிய நீரைத் தவிர்த்து, அடுத்த முறை கழுவிய சுத்தமான நீரைப் பயன்படுத்தலாம். இதை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
படி 4
வெங்காயம், பூண்டு சேர்க்கவும்
நீர் கொதிக்கத் தொடங்கியதும் தோல் உரித்த சின்ன வெங்காயம், தட்டிய பூண்டு, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவை நன்றாக வெந்து அவற்றின் சுவை நீரில் இறங்கும் வரை கொதிக்க விடவும்.
படி 5
முருங்கைக்கீரை சேர்க்கவும்
வெங்காயம், பூண்டு நன்றாக வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையைச் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கீரை நன்றாக வெந்து சாறு சுவையாக மாறும் வரை சமைக்கவும்.
படி 6
தாளித்துக் கொட்டவும்
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதை கொதித்துக்கொண்டிருக்கும் தண்ணி சாற்றில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
படி 7
சூடாகப் பரிமாறவும்
தாளித்த பிறகு, தேங்காயை அரைத்தோ அல்லது தேங்காய் பால்லையோ சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான், சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் தண்ணி சாறு தயார். இதைச் சூடான சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம் அல்லது ரசம் போலத் தனியாகவும் பருகலாம்.
தண்ணி சாறு சுவையாக வர சில குறிப்புகள்
- மிளகு, சீரகம் இடித்துச் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகமாக இருக்கும்.
- முருங்கைக்கீரை இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, காம்புகளை நீக்கிப் பயன்படுத்தவும்.
- காரம் குறைவாக விரும்பினால் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயின் அளவைக் குறைக்கலாம்.
- சாறு மிகவும் கெட்டியாகிவிட்டால் சிறிதளவு சூடான நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
- சுத்தமான குடிநீரில் கழுவிய அரிசியின் நீரைப் பயன்படுத்தி, சாற்றை நன்றாகக் கொதிக்க வைத்துச் சமைக்கவும்.
தண்ணி சாற்றுடன் எதைச் சேர்த்துச் சாப்பிடலாம்?
இந்தத் தண்ணி சாற்றை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். உருளைக்கிழங்கு வறுவல், கத்திரிக்காய் வறுவல், அப்பளம் அல்லது எளிய காய்கறிப் பொரியலுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

