- Home
- உடல்நலம்
- உணவு
- Foreign origin Indian dishes: நம்ம ஊரு உணவுன்னு நினைச்சா இது வெளிநாட்டு உணவா? ஆச்சரியப்படுத்தும் 5 இந்திய உணவுகள்!
Foreign origin Indian dishes: நம்ம ஊரு உணவுன்னு நினைச்சா இது வெளிநாட்டு உணவா? ஆச்சரியப்படுத்தும் 5 இந்திய உணவுகள்!
Foreign origin Indian dishes:பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வணிகம் மற்றும் பயணங்கள் வழியாக நம் நாட்டிற்குள் வந்த சில உணவுகள், நம் ஊர் மசாலாக்களோடு கலந்து இன்று நம் அடையாளமாகவே மாறிவிட்டன. அப்படி வெளிநாட்டு வேர்களைக் கொண்ட 5 பிரபலமான உணவுகள் இதோ:

சமோசா
மாலை நேர தேநீருடன் சமோசா இல்லாமல் பலருக்கும் பொழுது போகாது. ஆனால், இந்த முக்கோண வடிவ சிற்றுண்டி மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தது. ஆரம்பத்தில் அங்கு இறைச்சி நிரப்பப்பட்ட பலகாரமாக இருந்த இது, இந்தியா வந்த பிறகு உருளைக்கிழங்கு மசாலாவுடன் நம் ஊர் சுவைக்கு ஏற்ப மாறிப்போனது.
ஜிலேபி
திருமண விருந்துகள் மற்றும் பண்டிகை காலங்களில் ஜிலேபிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த இனிப்பு வகை மேற்கு ஆசிய பகுதிகளில் உருவானது. அங்கு 'ஸலாபியா' என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இனிப்பு, இந்தியா வந்த பிறகு புளித்த மாவைச் சுற்றி எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைக்கும் நம்மூர் ஸ்டைலாக உருமாறியது.
பிரியாணி
இந்தியாவின் அடையாளமாகப் பார்க்கப்படும் பிரியாணி, பாரசீக மற்றும் மத்திய ஆசிய சமையல் பாணியில் இருந்து உருவானது. 'பிரியன்' என்ற பாரசீகச் சொல்லில் இருந்து இதற்குப் பெயர் வந்தது. இந்தியா வந்த பிறகு ஹைதராபாத், கொல்கத்தா என ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ப உள்ளூர் மசாலாக்கள் சேர்க்கப்பட்டு பல வகைகளில் பிரபலமானது.
நான்
கிரேவி மற்றும் மசாலா வகைகளுக்குச் சிறந்த ஜோடியான 'நான்', பாரசீக மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து அறிமுகமான ஒரு வகை ரொட்டி. அங்கு தயாரிக்கப்பட்ட தட்டையான ரொட்டி வகைகள் இந்தியா வந்த பிறகு தந்தூரி அடுப்புகளில் சுடப்பட்டு, இன்று பட்டர் நான், கார்லிக் நான் எனப் பல சுவைகளில் ஹோட்டல்களில் கலக்குகிறது.
குலாப் ஜாமுன்
எந்தவொரு கொண்டாட்டத்தையும் முழுமையாக்கும் குலாப் ஜாமுன், மத்திய கிழக்கு மற்றும் பாரசீக இனிப்பு வகைகளின் தாக்கத்தால் உருவானது. அங்கு பிரபலமாக இருந்த மாவு உருண்டை இனிப்புகளைப் போலவே, இந்தியாவில் பால்கோவா பயன்படுத்தி, எண்ணெயில் பொரித்து வாசனையான சர்க்கரைப் பாகில் ஊறவைத்து நமக்கே உரிய தனித்துவமான இனிப்பாக மாற்றப்பட்டது.















