Mushroom Chutney: காளான் சட்னி ரெசிபி..காரசாரமான சுவையில் ஈஸியாக செய்வது எப்படி?
Mushroom Chutney: இட்லி, தோசைக்கு தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்து சலித்துவிட்டதா? சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய், காளான் சேர்த்து சுவையான காளான் சட்னி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

காளான் சட்னி செய்வது எப்படி?
தினமும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என ஒரே மாதிரியான சட்னிகளைச் செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக காளானை வைத்து ஒரு சூப்பரான சட்னி செய்து பாருங்கள்.
பொதுவாக காளானை வைத்து கிரேவி, மசாலா, வறுவல் எனப் பல உணவுகளைச் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், காளானுடன் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தேங்காய், புளி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தால் சுவையான காளான் சட்னி தயார்.
காரமும், புளிப்பும், தேங்காயின் மணமும் கலந்து நாவுக்கு விருந்தளிக்கும் இந்த சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள். இட்லி, தோசை மட்டுமின்றி சூடான சாதத்திற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சரி, இந்த ருசியான காளான் சட்னியை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
காளான் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
- காளான் - 200 கிராம்
- சின்ன வெங்காயம் - 150 கிராம்
- பூண்டு - 4 பல்
- இஞ்சி- 2 இன்ச்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 6
- தேங்காய் - கால் மூடி
- புளி - நெல்லிக்காய் அளவு
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1\2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- உப்பு - தேவையான அளவு
காளான் சட்னி செய்முறை - படி 1
காளானைத் தயார் செய்தல்
முதலில் காளானை நன்றாகச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். காளானில் அழுக்கு இல்லாதவாறு சுத்தம் செய்வது முக்கியம். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டையும் தயார் செய்து கொள்ளவும்.
படி 2
மசாலா பொருட்களை வதக்குதல்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதே கடாயில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
படி 3
காளானைச் சேர்த்தல்
இப்போது நறுக்கி வைத்துள்ள காளானைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். காளானில் இருந்து தண்ணீர் வெளியேறும். அந்தத் தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும். காளான் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவல், நெல்லிக்காய் அளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு சில நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
படி 4
சட்னியை அரைத்தல்
வதக்கிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவிடவும். பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பாக அல்லது மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
படி 5
தாளித்தல்
இறுதியாக ஒரு சிறிய தாளிப்புக் கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள காளான் சட்னியில் கொட்டவும் அவ்வளவுதான் சுவையான, காரசாரமான காளான் சட்னி தயார்.
எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்?
இந்தக் காளான் சட்னியை சூடான இட்லி, மொறுமொறுப்பான தோசை, ஊத்தப்பம், பணியாரம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம். குறிப்பாக, சூடான சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இந்தச் சட்னியைப் பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
ஒரே மாதிரியான சட்னிகளைச் செய்து சலித்துவிட்டவர்கள், இந்த வித்தியாசமான காளான் சட்னியை ஒருமுறை வீட்டிலேயே செய்து ருசித்துப் பாருங்கள்.
காளான் சட்னி சுவையாக வர சில குறிப்புகள்
- காளானை நறுக்கிய பிறகு நீண்ட நேரம் வெளியே வைக்காமல் விரைவாகச் சமைக்கவும்.
- காளானில் இயற்கையாகவே தண்ணீர் இருப்பதால், வதக்கும்போது அதிகத் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- காரம் அதிகமாக விரும்பினால் காய்ந்த மிளகாயின் அளவை அதிகரிக்கலாம்.
- புளியை அளவாகச் சேர்க்கவும். அதிகமாகச் சேர்த்தால் காளானின் சுவை மறைந்துவிடும்.
- தேங்காயை லேசாக வதக்கிச் சேர்த்தால் சட்னிக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
- சட்னியை அரைக்கும்போது அதிகத் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்தால் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.





