அன்லிமிடெட் நன்மைகளை வாரி வழங்கும் அத்திப்பழம்!! அதை வாங்கும் போது இந்த விஷயங்களில் உஷார்!!
அத்திப்பழங்களில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவு விளக்குகிறது.
உலர் பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம் என பல வகையான உலர் பழங்கள் கிடைக்கும். ஆனால் அவற்றை எப்படி வாங்குவது என்று உங்களுக்குத் தெரியுமா? உலர் பழங்களை வாங்கும் முன்பு எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை குறித்து பலருக்கும் தெரிவதில்லை.
பல ஆண்டுகளாக அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. அத்திப்பழங்கள் நம்மை இளமையாக வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது என முன்னோர் சொல்வர். இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் ஜீரணிக்கும் திறனை மேம்படுத்தும். மலச்சிக்கலை தடுக்க அரும்பங்காற்றும். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு ஆதரவாக செயல்படும்.
அத்திப்பழத்தில் உள்ள ஆப்சிசிக் அமிலம், மாலிக் அமிலம், க்ளோரோ ஜெனிக் அமிலம் ஆகியவை நம் ரத்தத்தில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தும். இதில் காணப்படும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் குறைய உதவும். அத்திப்பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை எலும்பு வலுவாக உதவும். மூல நோய்க்கு நல்லது. சருமத்தை பராமரிக்கும். இன்னும் ஏராளமான மருத்துவ நன்மைகள் அத்தியில் உள்ளன. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள அத்திப்பழங்களை வாங்குவதற்கான டிப்ஸ்களை இங்கு காணலாம்.
அத்திப்பழம் வாங்க டிப்ஸ்
1) நன்கு பழுத்த அத்திப்பழங்களை 2 நாட்களுக்குள் சாப்பிட்டால் நல்லது. அத்திப்பழங்களை வாங்கும் போது, அது புதியதாக இருக்க வேண்டும். பழத்தின் மீது கீறல் இருக்கக் கூடாது.
2) அத்திப்பழங்களை வாங்கும் போது, அதில் ஓட்டை ஏதும் இல்லை என்பதை கவனித்து வாங்க வேண்டும். பழங்களில் துளைகளுடன் பூச்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
3) நன்கு பழுத்த அத்திப்பழங்கள் இனிமையான நறுமணம் கொண்டவை. வாங்கும் போது அவற்றின் வாசனையை அறியுங்கள்.
4) அத்திப்பழங்கள் பழுக்காமல் இருந்தால், அவை பழுக்க அறை வெப்பநிலையில் உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
உலர்ந்த அத்திப்பழங்களை நீண்டகாலம் சேமிப்பது எப்படி?
உலர்ந்த அத்திப்பழங்களை சேமித்து வைக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அத்திப்பழங்களை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். இதனால் ஈரப்பதம் உருவாகாது. கண்ணாடி பாட்டில் இல்லாவிட்டால் காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாக்கள், ஜிப் போட்டு மூடிவிடும் பைகளில் வைக்கலாம். இதை பிரிட்ஜில் வைத்தால் அவை 6 முதல் 8 மாதங்களுக்கு நல்ல சுவையுடன் கெடாமல் இருக்கும். அத்திப்பழங்களின் மீது ஈரப்பதமும் இருக்கக்கூடாது. மீறினால் விரைவில் கெட்டுவிடும்.