- Home
- உடல்நலம்
- உணவு
- Mango Thokku : மாங்காய் தொக்கு.. புளிப்பு, காரம், இனிப்பு என 3 சுவையில் அள்ளும் சூப்பர் ரெசிபி!
Mango Thokku : மாங்காய் தொக்கு.. புளிப்பு, காரம், இனிப்பு என 3 சுவையில் அள்ளும் சூப்பர் ரெசிபி!
Mango Thokku: புளிப்பு, காரம், இனிப்பு என மூன்று சுவைகளும் கலந்த மாங்காய் தொக்கை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மாங்காய் தொக்கு செய்வது எப்படி
மாங்காய் என்றாலே நாவில் எச்சில் ஊறுகிறதா? அதிலும் புளிப்பும், காரமும், லேசான இனிப்பும் கலந்த மாங்காய் தொக்கை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.
வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்தே அட்டகாசமான மாங்காய் தொக்கை செய்யலாம். குறிப்பாக, மதிய உணவுக்கு என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இந்த மாங்காய் தொக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மாங்காயைத் துருவி, நல்லெண்ணெயில் மசாலாக்களுடன் வதக்கி, வெந்தயம், கடுகு அரைத்த பொடியின் மணத்துடன் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் இந்தத் தொக்கு, சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, தயிர் சாதம் ஆகியவற்றுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்.
மாங்காய் தொக்கு - தேவையான பொருட்கள்
மாங்காய் தொக்கு தயாரிக்க
- மாங்காய் - 2
- நல்லெண்ணெய் - 1\2 கப் (தேவைக்கேற்ப)
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மஞ்சள்தூள் - 1\2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 1\2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
- பெருங்காயத்தூள் - 1\4 டீஸ்பூன்
- வெல்லம் - 1 சிறிய துண்டு
- உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
மாங்காய் தொக்கு செய்வது எப்படி? படி 1
மாங்காயைத் தயார் செய்தல்
முதலில் புளிப்புச் சுவை கொண்ட மாங்காயை எடுத்துக்கொள்ளவும். அதன் தோலை நீக்கி, தண்ணீரில் சுத்தமாகக் கழுவி துருவி வைத்துக்கொள்ளவும்.
படி 2
மசாலா பொடி தயாரித்தல்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெந்தயம், கடுகு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
படி 3
தாளித்தல்
இப்போது கடாயை அடுப்பில் வைத்து தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
படி 4
மாங்காயை வதக்குதல்
தாளித்த கலவையுடன் துருவி வைத்துள்ள மாங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மாங்காயின் பச்சை வாசனை நீங்கி ஓரளவு வதங்கும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
படி 5
மசாலா சேர்த்தல்
இப்போது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், அரைத்து வைத்துள்ள வெந்தயம் - கடுகு பொடி மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். அனைத்தும் மாங்காயுடன் நன்றாகக் கலக்கும்படி கிளறவும்.
படி 6
வெல்லம் மற்றும் உப்பு சேர்த்தல்
அடுத்ததாக வெல்லத்தைத் துருவிச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். வெல்லம் சேர்ப்பதால் மாங்காயின் புளிப்புச் சுவையுடன் லேசான இனிப்பும் கலந்து தொக்கு கூடுதல் சுவை பெறும்.
படி 7
தொக்கு பதம்
மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். தொக்கில் உள்ள ஈரப்பதம் குறைந்து, எண்ணெய் பிரிந்து மேலே வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவுதான் வையான மாங்காய் தொக்கு தயார்.
படி 8
மாங்காய் தொக்கை சூடான சாத்தில் சேர்த்து சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மாங்காய் தொக்கை எப்படிப் பாதுகாப்பது?
- தொக்கு முழுமையாக ஆறிய பிறகே கண்ணாடி பாட்டிலில் சேமிக்க வேண்டும்.
- பாட்டில் ஈரமில்லாமல் சுத்தமாகவும் உலர்ந்தும் இருக்க வேண்டும்.
- எப்போதும் உலர்ந்த ஸ்பூனை மட்டுமே பயன்படுத்தவும்.
- குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாப்பது சிறந்தது.
- ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிடுவது நல்லது. வாசனை, நிறம் அல்லது பூஞ்சை போன்ற மாற்றங்கள் இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.
சின்ன மாங்காய் தொக்கு, பெரிய சுவை
வீட்டில் இருக்கும் சாதத்தில் கொஞ்சம் மாங்காய் தொக்கு சேர்த்தாலே சுவையான மதிய உணவு தயார். குறிப்பாக மாங்காய் சீசனில் இந்த ரெசிபியைத் தவறாமல் செய்து பாருங்கள்.
குறிப்பு : பிரபல சமையல் கலைஞர் செஃப் தீனு அவர்கள் பின்பற்றிய உணவு தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த மாங்காய் தொக்கு செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













