- Home
- உடல்நலம்
- உணவு
- Honey Amla: வீட்டிலேயே தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி? எத்தனை நாள் வைத்திருக்கலாம்?
Honey Amla: வீட்டிலேயே தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி? எத்தனை நாள் வைத்திருக்கலாம்?
Honey Amla: வீட்டிலேயே தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், தேனில் ஊறவைக்கும் முறை மற்றும் எத்தனை நாட்கள் சேமிக்கலாம் என்பதற்கான முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி?
வீட்டிலேயே தேன் நெல்லிக்காய் செய்வது மிகவும் எளிது. நெல்லிக்காயின் துவர்ப்பும், தேனின் இனிப்பும் சேர்ந்து சுவையாக இருக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் C உள்ளன. இதை தேனுடன் சேர்த்து, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமித்தால் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டு நெல்லிக்காய் - 500 கிராம்
தேன் - தேவையான அளவு
விருப்பப்பட்டால் – சிறிதளவு இலவங்கப்பட்டை அல்லது ஏலக்காய், வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை
- நல்ல தரமான, கெட்டுப்போகாத நாட்டு நெல்லிக்காய்களைத் தேர்ந்தெடுத்து தண்ணீரில் நன்றாகக் கழுவவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயை 5–7 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இதனால் நெல்லிக்காய் சற்று மென்மையாகும். அதிகமாக வேகவைக்க வேண்டாம்.
- ஆறியதும் நெல்லிக்காயைச் சிறிய துண்டுகளாகவும் வெட்டி அதற்குள் இருக்கும் கொட்டையை அகற்றவும். விருப்பட்டால் முழு நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.
- வேகவைத்த நெல்லிக்காயில் தண்ணீர் இருக்கக்கூடாது என்பதால், சுத்தமானதுணியால் துடைத்து, முழுமையாக ஈரம் இல்லாமல் உலர்த்தவும்.
- இதற்கு பிறகு சுத்தமான, முற்றிலும் உலர்ந்த கண்ணாடி ஜாடியில் நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு, அவை முழுவதும் மூழ்கும் அளவுக்கு தேன் ஊற்றவும்.
- ஜாடியை இறுக்கமாக மூடி, குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். தினமும் ஒருமுறை ஜாடியை மெதுவாகக் குலுக்கலாம். 2–3 நாட்களுக்குப் பிறகு சாப்பிடலாம். ஒரு வாரம் ஊறிய பிறகு சுவை இன்னும் நன்றாக இருக்கும்.
எத்தனை நாள் வைத்திருக்கலாம்?
வீட்டில் தயாரிக்கும் தேன் நெல்லிக்காயை அவற்றை தயாரிக்கும் முறை, ஈரப்பதம், பயன்படுத்தும் கரண்டி ஆகியவற்றை பொறுத்து எத்தனை நாள் வைத்திருக்கலாம் என்பதை சொல்ல முடியும்.
- அறை வெப்பநிலையில் நீண்ட நாட்கள் வைத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
- சுத்தமாகவும் ஈரமில்லாமலும் தயாரித்திருந்தால் பொதுவாக சில வாரங்களுக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பான நடைமுறை.
- ஒவ்வொரு முறையும் சுத்தமான, உலர்ந்த கரண்டியை மட்டுமே பயன்படுத்தவும்.
- ஜாடிக்குள் தண்ணீர் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
குறிப்பு: துர்நாற்றம், பூஞ்சை, அதிகமாக நொதித்தல், நிறம் அல்லது சுவையில் அசாதாரண மாற்றம் தெரிந்தால் சாப்பிடாமல் தூக்கி எறியவும். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். நல்ல நாட்டு தேன் மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்தவும்.

