Water: தினந்தோறும் ஒருவர் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
உண்மையில் தினசரி ஒருவர் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இங்கு அறிந்து கொள்வோம்.
உடல் இயக்கங்கள் சீராக இயங்க தண்ணீர் மிக அவசியமாகும். ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதே சமூக வலைத்தளங்களில், அதிக தண்ணீர் குடித்ததால் தான் புரூஸ் லீ இறந்து போனார் என்ற ஒரு செய்தியும் பரவி வருகிறது. ஆனால், உண்மையில் தினசரி ஒருவர் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இங்கு அறிந்து கொள்வோம்.
தண்ணீர் குடிப்பது குறித்த ஆய்வு
தினந்தோறும் குறைவாகத் தண்ணீர் குடித்தாலும் பிரச்சனை; அதிகளவு தண்ணீர் குடித்தாலும் பிரச்சனை. இந்த நிலையில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை என்பதை, சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. உண்மையை சொல்வதென்றால், ஒருவர் தினந்தோறும் 8 கப் தண்ணீர் குடித்தாக
வேண்டும் என்ற செய்தி அனைவருக்கும் பொருந்தாது என சொல்கிறது இந்த ஆய்வு முடிவுகள்.
ஒருவருக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை பல்வேறு காரணிகள் நிர்ணயம் செய்கிறது. அமெரிக்க ஆய்வாளர்கள் 26 நாடுகளைச் சார்ந்த 5,600 நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒருவருக்கு தினந்தோறும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பது, அவர்களது வயது, உடல் எடை, அவர்களுடைய உடல் உழைப்பு, அவர் விளையாட்டு வீரரா மற்றும் கர்ப்பிணி பெண்ணா என்பது போன்ற பல விஷயங்களைப் பொருத்து மாறுபடும் என தெரிவிக்கிறது.
எடுத்துக்காட்டாக, விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் உழைப்பை பயன்படுத்தி மிகவும் கடினமாக உழைப்பவர்கள் போன்றோருக்கு அதிகளவில் வியர்வை வெளியேறுவதால், அவர்களின் உடலில் இருந்து அதிகளவிலான திரவங்கள் வெளியேறுகிறது. எனவே, விளையாட்டு வீரர்களுக்கு, மற்றவர்களை காட்டிலும் சுமார் ஒரு லிட்டர் தண்ணீராவது அதிகமாகத் தேவை என சொல்கிறது இந்த ஆய்வு.
இதேபோல ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் கூட தண்ணீர் தேவையில் வித்தியாசம் உள்ளது என தெரிய வந்துள்ளது. 20 வயதுடைய ஒரு ஆண் சராசரியாக தினந்தோறும் ஏறக்குறைய 3.2 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார். அதே சமயத்தில் அதே வயதுள்ள, அதே சூழலில் வாழும் ஒரு பெண் 2.7 லிட்டர் தண்ணீர் தான் குடிக்கிறார் என சொல்கிறது இந்த ஆய்வு.
மேலும், நாம் வாழ்கின்ற இடம் எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் அங்கு நிலவும் வெப்பநிலை எப்படி இருக்கிறது; காற்றில் உள்ள ஈரப்பதம் எவ்வளவு என்பது போன்ற விஷயங்களும் ஒருவருக்கு தினசரி எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள்.