- Home
- உடல்நலம்
- உணவு
- 7 Healthy snacks for a week: உப்புக்கடலை டூ பொட்டுக்கடலை... தினமும் ஒரு ஸ்நாக்ஸ்!
7 Healthy snacks for a week: உப்புக்கடலை டூ பொட்டுக்கடலை... தினமும் ஒரு ஸ்நாக்ஸ்!
7 Healthy snacks for a week: கடைகளில் விற்கும் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டு உங்கள் பிள்ளைகளின் ஹெல்தை வீணாக்காமல் தினமும் ஒன்று என வாரம் 7 நாட்களுக்கு இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணுங்க.

7 நாள் 7 ஸ்நாக்ஸ்
இன்றைய அவசர உலகில், மாலை நேரப் பசிக்கு நாம் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது மைதா நிறைந்த பிஸ்கட், கேக், பப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த சமோசா போன்ற உணவுகளைத்தான். இவை உடனடி சுவையைத் தந்தாலும், நீண்ட கால அடிப்படையில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. இந்தச் சூழலில், நமது பாரம்பரியத்தில் ஊறிய, எளிதில் கிடைக்கக்கூடிய, மொறுமொறுப்பான 7 ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஏற்றவாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வறுத்தக்கடலை / நிலக்கடலை
பள்ளியிலிருந்து சோர்வாக வீடு திரும்பும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய சத்தான சிற்றுண்டி. இது அதிக கலோரி கொண்ட ஸ்நாக்ஸ் என்பதால், வளரும் குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, மெக்னீசியம், வைட்டமின் E மற்றும் 'ரெஸ்வெராட்ரால்' எனும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் நிறைந்துள்ளது.
பொட்டுக்கடலை
உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், அன்றாட உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் ஏற்ற எளிய புரத உணவு. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து (Iron), மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் (Zinc) ஆகியவை இதில் ஒருங்கே அமைந்துள்ளன. தசை வலிமைக்கும், தசைகளில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யவும் (Muscle repair), நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
வறுத்த சோளம்
இன்று பலரும் கணினி மற்றும் மொபைல் திரைகளை அதிக நேரம் பார்ப்பதால் கண் சோர்வும், சருமப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதற்கு வறுத்த சோளம் மிகச்சிறந்தது. இதில் லூட்டின் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளதால், கண் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களுக்கு இது ஒரு சிறந்த 'ப்ரீபயாடிக்' உணவாகச் செயல்பட்டு செரிமானத்தை மேம்படுத்துகிறது.
வறுத்த அவல்
வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் எளிதாகச் செரிமானம் செய்யக்கூடிய ஒரு இலகுவான சிற்றுண்டி. இது எளிதில் ஜீரணமாகக்கூடியது. வெள்ளை அவலை விடச் சிகப்பு அவலைத் தேர்ந்தெடுப்பது கூடுதல் சிறப்பு; ஏனெனில் சிகப்பு அவலில் 'ஆந்தோசயனின்' (Anthocyanin) எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிக அதிகமாக உள்ளது.
உப்புக்கடலை
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு. இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம். கொண்டைக்கடலையைத் தோலுடன் வறுத்துச் சாப்பிடுவதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் 'ஆன்டி-நியூட்ரியன்ட்' காரணிகள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கின்றன.
பொரி அல்லது காரப்பொரி
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் குற்ற உணர்ச்சியின்றிச் சாப்பிடக்கூடிய உணவு. இது மிகவும் குறைந்த கொழுப்புச் சத்து கொண்டது. ஒரு கப் பொரி சாப்பிடுவதன் மூலம் வெறும் 50 முதல் 60 கலோரிகள் மட்டுமே உடலுக்குக் கிடைக்கும். இது உடல் எடையைச் சீராகப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது.
வறுத்த பட்டாணி
அலுவலக வேலைகளுக்கு இடையே அடிக்கடி பசி எடுப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வு. புரதச்சத்து நிறைந்திருப்பதால், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்குப் பசி எடுக்காமல் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதில் ஃபோலிக் அமிலம் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிக அளவில் உள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.















