ரஜினி சொன்னா மட்டும் கோபப்படுவீங்க; உதயநிதி சொன்னா ஏத்துக்குவீங்களா? துரைமுருகனை சீண்டும் நெட்டிசன்கள்
திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களை சமாளிப்பது சவாலானது என்று ரஜினிகாந்த் கூறியது துரைமுருகனை சீண்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூத்த நடிகர்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதாக துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால், இதே கருத்தை உதயநிதி ஸ்டாலினும் முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
துரைமுருகன் ரஜினி வார்த்தை யுத்தம்
திமுகவில் நிறைய பழையவர்கள் இருக்கிறார்கள். இவர்களை சமாளிப்பது ஸ்டாலினுக்கு சவாலான விஷயம் என ரஜினிகாந்த் பேசியது தான் துரைமுருகனை சீண்டியுள்ளது. இதனால் நடிகர் ரஜினியை விமர்சிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார். இந்த சம்பவம் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ. வேலு எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின். நடிகர் ரஜினிகாந்த். அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அரசியலில் நுழைந்து கடினமான உழைத்து, பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டு, மக்கள் மத்தியில், தொண்டர்கள் மத்தியில் அருமையான, பெயர், புகழ் பெற்று, அரசியலில் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என பாராட்டினார். தொடர்ந்து பேசியவர், பள்ளியில் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே ஏகப்பட்ட பழையவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல என தெரிவித்தார்.
ரஜினியின் ஜாலியான பேச்சு
துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். இப்படி ஒன்று செய்யப்போகிறோம் என்று சொன்னால் சந்தோஷம்னு தான் சொல்வார். ஆனால் அவர் நல்லா இருக்கு என்பதற்கு இப்படி சொல்றாரா? இல்ல என்னடா இப்படி பண்றீங்கனு நினைச்சி அப்படி சொல்றாரான்னு சுத்தமா புரியாது என கூறியவர், முக ஸ்டாலின் சார் Hats off too you என பாராட்டி பேசியிருந்தார். ரஜினியின் இந்த ஜாலியான பேச்சை முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைத்து தலைவர்களும் ரசித்த நிலையில் துரைமுருகனுக்கு ஆத்திரத்தை தூண்டியுள்ளது.
பல்லு விழுந்த நடிகர்கள்
ரஜினியின் பேச்சு தொடர்பான கேள்விக்கு பதில் கொடுத்த துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல்லு விழுந்து போய், தாடி வளர்த்து சாகப்போகின்ற நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகின்றது என தெரிவித்தார். துரைமுருகனின் பேச்சிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேடையில் ஜாலியாக பேசியதை துரைமுருகன் ஏற்றுக்கொள்ளாமல் சீரியஸாக எடுத்துக்கொண்டதாக விமர்சித்து வருகின்றனர்.
இளைஞர்களுக்கு வழிவிடனும்
ஆனால் இதே கருத்தை உதயநிதியும் பேசியுள்ளார். நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய உதயநிதி, இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் அதை சொன்னால் மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள் என தெரிவித்தவர் ஓல்ட் இஸ் கோல்ட் தான் என கூறினார்.
துரைமுருகன் என்ன சொல்வார்.?
இந்தநிலையில் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகன், இதே கருத்தை தான் உதயநிதியும் வழிமொழிந்து பேசியுள்ளார். எனவே உதயநிதிக்கு எதிராக துரைமுருகன் கருத்து தெரிவிப்பாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.