Waheeda Rehman: எம்.ஜி.ஆர் - கமல்ஹாசனுடன் நடித்த நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது!
திரையுலகினருக்கு வழங்கப்படும், மிக உயரிய விருதுகளில் ஒன்றான, தாதாசாகேப் பால்கே விருது, இந்த ஆண்டு நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக, மத்திய தகவல் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். வஹீதா ரஹ்மான்... தெலுங்கில் 1955 ஆம் ஆண்டு ஒரு டான்சராக அறிமுகமாகி, பின்னர் நடிகையானவர். தமிழில் 1955 ஆம் ஆண்டு வெளியான 'காலம் மாறி போச்சு' படத்தில் டான்சராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து, MGR நடிப்பில் வெளியான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில், இடம்பெற்ற 'சலாம் பாபு' பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
பின்னர் ஹிந்தி திரையுலகில் நுழைந்த வஹீதா, ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். இவர் நடித்த ஹிந்தி படங்களுக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே 70-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் ஷாஷி ரேகி என்கிற ஹிந்தி நடிகரை 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வஹீதா... பல வருடங்களாக திரைத்துறையில் அர்பணிப்புணர்வுடன் நடித்து வருகிறார். தற்போது 85 வயதாகும் வஹீதா, தமிழில் கடைசியாக... உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, விஸ்வரூபம் 2 படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் 2021 ஆம் ஆண்டு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வெளியான 'ஸ்கேட்டர் கேர்ள்' என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து வயது மூப்பு காரணமாக, எந்த படங்களிலும் நடிக்காமல் ஓய்வில் இருக்கும் இவருக்கு... தற்போது தாதாசாகேப் பால்கே விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள, வஹீதா ரஹ்மான்... பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளையும் , ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்றவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.