மீண்டும் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்.. அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி.. சொத்து மதிப்பு எவ்வளவு?
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீட்டெடுத்துள்ளார்.
ப்ளூம்பெர்க் குறியீட்டின்படி, அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீட்டெடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதானி குழுமத்தின் பங்குகள் 14 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்தது. இதை தொடர்ந்து அவர் தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக மாறி உள்ளார்.
இதன் மூலம், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானியை அதானி முந்தியுள்ளார். அம்பானி 109 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அவரது குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால் அதானியை பின்னுக்கு தள்ளி அம்பானி முன்னேறினார்.
இதுவரை 2024 ஆம் ஆண்டில், அதானியின் நிகர மதிப்பு 26.8 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது, அம்பானியின் சொத்து மதிப்பு 12.7 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம், அதானி குழுமத்தின் எதிர்காலம் குறித்து தனது நம்பிக்கையை அதானி வெளிப்படுத்தினார், அப்போது பேசிய அவர் "முன்னோக்கிச் செல்லும் பாதை அசாதாரணமான சாத்தியக்கூறுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதானி குழுமம் இதுவரை இருந்ததை விட இன்று வலுவாக உள்ளது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
2023-ம் ஆண்டு அதானி குழுமத்திற்கு மிகவும் சவாலான காலமாக இருந்தது, அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் வரலாறு காணாத மோசடி செய்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் வேகமாக சரிய தொடங்கின. மேலும் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்த அதானி பின்னடவை சந்தித்தார்.
இருப்பினும், பின்னர் உச்ச நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீதான விசாரணையை முடிக்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உத்தரவிட்டது. செபி தனது விசாரணையில் ஒரு முடிவை எட்டவில்லை என்று கூறி, இதற்குபின் விசாரணை தேவையில்லை என்று கூறியது.
இதை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஜனவரியில், அதானி கிட்டத்தட்ட 12 மாதங்களுக்குப் பிறகு அம்பானியை முந்தினார், ஆனால் பின்னர் மீண்டும் அம்பானி முன்னிலை பெற்றார். தற்போது மீண்டும் அம்பானியை அதானி முந்தியுள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தற்போது, பெர்னார்ட் அர்னால்ட் 207 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்பதைக் காட்டுகிறது.
அவருக்கு அடுத்தபடியாக எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் முறையே $203 பில்லியன் மற்றும் $199 பில்லியன் சொத்துக்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.