உருட்டனதே உருட்டிய அதிமுக செயற்குழு கூட்டம்; சப்புன்னு முடிந்தது!!
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனி அணி அமைக்கும் தகவல் என பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இன்றைய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது. இதனையடுத்து அதிமுகவிற்கு தலைமையேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தேர்தல் வெற்றி கூட பெறமுடியவில்லை. உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்துமே பின்னடைவே ஏற்பட்டது. இதனால் அதிமுகவை விட்டு பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் எழுந்தது.
அதற்கு ஏற்றார் போல ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைய தயார். கட்சிக்காக எதையும் விட்டுக்கொடுப்பேன் என தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருந்தார். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை மீண்டும் இணைக்க முடியாது என கூறினார். இந்தநிலையில் அதிமுகவை வலுப்படுத்த பல முயற்சிகளை எடுத்தார். அதன் ஒருபகுதியாக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 115 ஆக அதிகரிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு தற்போது அதிகார பலத்தில் இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திரட்டி வருவதாகவும் தகவல் வெளியானது
இந்தநிலையில் தான் செயற்குழு கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவு எடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டம் போட்டார். இதன் படி இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முதல் ஆளாக வரவேற்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மறைந்த எம்ஜிஆர் கழக நிறுவனர் ஆர் எம் வீரப்பன், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், உள்ளிட்ட 306 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அரசியல் எதிரிகளால் படுகொலைக்கு உள்ளான மற்றும் முதுமை காரணமாக மரணமடைந்த அதிமுக நிர்வாகிகள் சுமார் 292 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தமிழ்கத்தில் முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ,
காவிரி, முல்லை பெரியார், மேகதாது உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளில் மெத்தன போக்கை கடைப்பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் அதனை அடுத்து வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் அதிமுக வெற்றியை பெறுவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளையும் , அரசியல் யூகங்களையும் , சிறந்த ஒரு கூட்டணியையும் அமைத்து, தேர்தல் வியூகங்களை வகுத்து தமிழக வாக்காள பெருமக்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியையும் ..
அதனை எடுத்து 2026 இல் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளுக்கு அரனாக விளங்கி இரவு பகல் பாராமல் தேர்தல் பணிகளை ஆற்றுவது என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுக மாவட்டங்கள் அதிகரிப்பு குறித்து பேசவில்லை, சசிகலா, ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் இணைப்பு குறித்து பேசவில்லை. எனவே புதிய முடிவு எதுவும் எடுக்காமல் வழகம் போல் கூட்டம் நடைபெற்று முடிவடைந்துள்ளது.