திமுக திருந்தாது! அதிமுக பாஜக கூட்டணி முறிவு! வேறு ஏதோ காரணம் இருக்கு! சந்தேகத்தை கிளப்பும் டிடிவி.தினகரன்.!
அதிமுக பாஜக கூட்டணி முறிவிற்கு அண்ணாவை, ஜெயலலிதா ஆகியோரை அவதூறாக பேசியது காரணமல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பிரிந்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணி முறிவிற்கு அண்ணாவை, ஜெயலலிதாவை தாண்டி ஏதோ ஒரு காரணம் உள்ளது. டெல்லி சென்ற இபிஎஸ் தரப்பினர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை.
ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அதிமுக. தற்போது உள்ள கட்சி களவாடப்பட்ட அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். மக்கள் மத்தியில் திமுக கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி பலத்தால் வென்றனர். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் தேவையான திட்டங்களைப் பெற முடியும் என முதல்வர் சொல்கிறார். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை. இவர்கள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற முடியாது.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் தருவோம் என்றார்கள். தற்போது உரிமைத்தொகை கிடைக்காத குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி விடியல் தரும் ஆட்சி அல்ல காமெடி ஆட்சி நடக்கிறது. சசிகலாவிடமிருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவுக்கும் நன்றி இல்லாமல் இருந்தார். நான்காண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தயவில் ஆட்சியை நடத்தி வந்தார். தற்போது அவர்களுக்கும் உண்மையாக இல்லை என புரிந்து இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மத்தியில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் போது தான் தட்டிக் கேட்க முடியும். இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மூட்டையிலிருந்து நெல்லிக்காய் போல சிதறும். ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். அப்போது தான் உள் ஒதுக்கீடு செய்ய முடியும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி நடத்தி வருகிறார். இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் எதையும் அவர்கள் செய்யவில்லை. திமுக திருந்தாது என்பதை நிரூபித்து வருகிறார்கள். அமமுக பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய கூட்டணியில் இருக்கும், அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனித்து போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் அமமுக நிலைப்பாடு குறித்து 2 மாதங்களில் அறிவிப்போம். 2026ல் அமமுக ஆட்சியைப் பிடிக்கும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.