6 முறை கருக்கலைப்பு செய்தது உண்மையா? நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்.. இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்..!
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக இன்று காலை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2012ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று என்னை கட்டாயப்படுத்தி 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் தன்னை ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது விசாரணையை கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திலும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
விஜயலட்சுமி தனது புகாரில் சீமான் தன்னை 6 முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக குறிப்பிட்டதை அடுத்து அவருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து விசாரணை நடத்த ஆஜராகும்படி சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் இன்று காலை 10:30 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சீமான் வெளியூர் செல்வதால், வரும் செவ்வாய் ஆஜராகுவதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.