- Home
- குற்றம்
- பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
கண்ணூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை, அதன் தாய் சரண்யா பாறையில் மோதிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில், நீதிமன்றம் தாய் சரண்யாவை குற்றவாளி என தீர்ப்பளித்து, கள்ளக்காதலனை போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு வியான் என்ற ஆண் குழந்தை இருந்து வந்தது. இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சரண்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த நிதின் (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இதனையடுத்து உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை கொலை செய்ய தாய் மற்றும் கள்ளக்காதலன் திட்டமிட்டனர்.
அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி அதே பகுதியில் உள்ள கடற்கரையில் தடுப்புச்சுவர் போல உள்ள பாறைகளில் குழந்தையை வீசியும், தலையை பாறையில் மோத செய்தும் 2 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். ஆனால் எதுவும் தெரியாதது போல சரண்யா குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கணவர் பிரணவ் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.
போலீஸ் விசாரணையில் குழந்தையை தான் கொலை செய்யவில்லை எனக்கூறிய பிரணவ், மனைவி மீது தான் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். சரண்யாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தளிப்பரம்பு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குழந்தையை கொன்ற சரண்யா குற்றவாளி என்றும் நிதின் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சரண்யா தண்டனை விவரம் இன்று வெளியாக உள்ளது.

