- Home
- குற்றம்
- கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!
கோவையில் ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! சுத்துப்போட்ட போலீஸ்! தெறித்த தோட்டாக்கள்!
கோவையில் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் புகுந்து 56 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வந்தனர். குனியமுத்தூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சுட்டு பிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மொத்தம் 1,848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காலையில் பணிக்கு சென்றால் மாலை அல்லது இரவு நேரங்களில் வருவது தான் வழக்கம். ஆகையால் பெரும்பாலும் பூட்டியே இருக்கும். ஒரு சில வீடுகளில் மட்டுமே ஆட்கள் இருப்பார்கள்.
இந்நிலையில், இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி3 பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் நேற்று மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளையடித்த கும்பல் குனியமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்த நிலையில் 3 கொள்ளையர்கள் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர். வலியால் துடித்த அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

