- Home
- Cinema
- பூதாகரமாக வெடித்த பாடி ஷேமிங் விவகாரம்... கெளரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டார் யூடியூபர் கார்த்திக்
பூதாகரமாக வெடித்த பாடி ஷேமிங் விவகாரம்... கெளரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டார் யூடியூபர் கார்த்திக்
நடிகை கெளரி கிஷானை பாடி ஷேமிங் செய்யும் வகையில் கேள்வி கேட்ட யூடியூபர் கார்த்திக், ஆரம்பத்தில் மன்னிப்பே கேட்க மாட்டேன் என கூறி வந்த நிலையில், தற்போது விஷயம் பெரிதானதால் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Youtuber Karthik Apologizes to Gouri Kishan
செய்தியாளர் சந்திப்பில் அவதூறான கேள்வி கேட்டதற்காக நடிகை கௌரி கிஷனிடம் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கோரியுள்ளார். கௌரி கிஷனை காயப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கார்த்திக் கூறினார். அதே சமயம், தனது செயலை நியாயப்படுத்தவும் கார்த்திக் முயற்சித்துள்ளார். பாடி ஷேமிங் செய்யவில்லை என்றும், தனது கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். வீடியோ மூலம் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
விமர்சனங்கள் வலுத்ததை அடுத்து, கார்த்திக் மன்னிப்பு கோரி உள்ளார். முன்னதாக இன்று காலையில், தான் தவறாக எதுவும் கேட்கவில்லை என்றும், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கறாராக கூறியிருந்தார். ஆனால் தற்போது பிரச்சனை பெரிதாகி, பிரபலங்கள் பலரும் கெளரிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், வேறுவழியின்றி மன்னிப்பு கேட்டிருக்கிறார் கார்த்திக்.
என்ன பிரச்சனை?
முன்னதாக சென்னையில் நடைபெற்ற அதர்ஸ் படத்தின் பிரஸ் மீட்டின் போது, படத்தில் கதாநாயகியைத் தூக்கியபோது அவரது எடை என்னவாக இருந்தது என்று ஒரு யூடியூபர் கார்த்திக் சிரித்துக்கொண்டே கதாநாயகனிடம் கேட்டார். உடல் எடை குறித்த கேள்வி முட்டாள்தனமானது மற்றும் பாடி ஷேமிங் என்று கூறிய கௌரி ஜி கிஷன், கதாநாயகிகள் அனைவரும் ஒல்லியாக இருக்க வேண்டுமா என்றும் கேட்டார். அந்த யூடியூபர் தனது கேள்வியை நியாயப்படுத்த முயன்றபோதும், அது ஒரு மோசமான கேள்வி என்று கௌரி கிஷன் பதிலடி கொடுத்தார்.
ஆனால், செய்தியாளர் சந்திப்பில் கௌரியுடன் இருந்த இயக்குனர் அபின் ஹரிஹரன் மற்றும் நாயகன் ஆதித்யா மாதவன் ஆகியோர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தனர். கேள்வி கேட்ட யூடியூபரை சமாதானப்படுத்தவும், பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று கூறவுமே இயக்குனர் முயன்றார். சமூக வலைதளங்களில் கௌரிக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. பாடகி சின்மயி, கவின், பா.இரஞ்சித், குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் கௌரிக்கு ஆதரவாக வந்தனர்.