கட்டுப்பாட்டை இழந்த கார்; விபத்தில் சிக்கிய யோகிபாபுவுக்கு என்ன ஆச்சு?
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் சிக்கிய யோகிபாபு
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு யோகிபாபுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் யோகிபாபு நடித்த படம் ஏதாவது ஒன்று ரிலீஸ் ஆகிவிடும் என்கிற நிலைமை தான் உள்ளது. அந்த அளவுக்கு நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்று நடித்து வருகிறார் யோகிபாபு. அண்மையில் கூட அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.
விபத்து நிகழ்ந்தது எப்படி?
இரவு பகல் பாராமல் நடித்து வருகிறேன் என்று யோகிபாபுவே பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். இந்நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஷூட்டிங்கிற்காக தன் காரில் சென்றுகொண்டிருந்தார் யோகிபாபு. அப்போது வேலூர் அருகே வாலாஜாப்பேட்டையின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது எதிர்பாரா விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள டிவைடரில் கார் மோதி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... யோகிபாபுவின் ‘அக்யூஸ்ட்’ படத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய புழல் சிறை!
யோகிபாபுவுக்கு என்ன ஆச்சு?
இதில் நல்வாய்ப்பாக நடிகர் யோகிபாபு மற்றும் அவர் உடன் பயணித்தவர்கள் எந்தவித காயமும் இன்றி தப்பித்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து மற்றொரு காரில் பெங்களூரு கிளம்பி சென்றார் யோகிபாபு. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
பதறிப்போன கோலிவுட்
இதேபோல் கடந்த ஆண்டு நடிகர் ஜீவா தன் காரில் பயணித்தபோது அவர் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. அதில் அவர் லேசான காயங்களுடன் தப்பினார். தற்போது யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அறிந்த பிரபலங்கள் பலரும் யோகிபாபுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்து வந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... 10th பெயிலா?... எவ்வளவு சம்பளம்? தன்னைப்பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு யோகிபாபு அளித்த பதில்கள்