பல ஹிட் பாடல்களை கொடுத்தும்... கண்டுகொள்ள படாத இசையமைப்பாளர் சபேஷ்! இது தான் காரணமா?
Why Music Director Sabesh Did Not Get the Spotlight: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரனும், இசையமைப்பாளருமான சபேஷ் பல ஹிட் பாடல்களை கொடுத்த போதும், இதுவரை கண்டுகொள்ளப்படாத பிரபலமாக மாறியதன் காரணம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

கண்டுகொள்ளப்படாத சபேஷ்:
தமிழ் சினிமாவில், ஒரே ஒரு ஹிட் பாடலை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர்களும் உண்டு. அதே போல் பல ஹிட் பாடல்களை கொடுத்து கண்டுகொள்ளப்படாதவர்களும் உண்டு. அந்த வகையில், இசையமைப்பாளர் தேவாவை பற்றி தெரிந்த பலருக்கும் அவரின் சகோதரரான சபேஷ் - முரளி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆரம்பகட்ட பணி:
இதற்க்கு முக்கிய காரணம், இவர்கள் தேவா அளவுக்கு 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தது இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து, பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் தேவாவின் அசிஸ்டண்ட்களாக / கீபோர்டிஸ்ட்களாக வேலை செய்தனர். பின்னர் தனியாக இசையமைக்கத் தொடங்கினார்.
சமுத்திரம்:
இவர்கள் முதலில் இசையமைத்த திரைப்படம் சமுத்திரம். கடந்த 2001-ம் ஆண்டு சரத்குமார், முரளி, மனோஜ் பாரதிராஜா, காவேரி, அபிராமி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு இருந்த கிடைத்த வரவேற்பு போலவே, இசையும் அதிக அளவில் பேசப்பட்டது. சமுத்திரம் படத்தின் வெற்றி சபேஷ் - முரளி சகோதரர்கள் இசைப்பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
சபேஷ் இசையமைத்த ஹிட் படங்கள்:
சபேஷ் - முரளி இருவருமே இணைந்து இதுவரை இசையமைத்த, அடைக்கலம், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, மாயாண்டி குடும்பத்தினர், மிளகா, கோரிப்பாளையம், உள்ளிட்ட சுமார் 15 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இதில் பெரும்பாலும் ஹிட் படங்கள் தான். அதே போல் இசையில் இவர்கள் இருவரும் செய்த முயற்சிகளும் வித்தியாசமானது.
சபேஷ் - முரளியின் புதிய முயற்சி:
குறிப்பாக “பொக்கிஷம்” படத்தில் பாரம்பரிய பல்லவி–அனுபல்லவி–சரணம் போன்ற அமைப்பை தவிர்த்து, ஒரே மெட்டில் பல்வேறு வரிகளால் பாடல்கள் அமைத்தனர். அதே போல் “வைகை” படத்திற்காக பழைய பாடலை ரீமிக்ஸ் செய்யாமல், அசல் பாடல் குழுவை மீண்டும் அழைத்து வந்து மீண்டும் பதிவு செய்தனர். இதன் மூலம் பழைய பாடல்களுக்கு மரியாதை செலுத்தினர். இவர்களின் படங்கள் பெரும்பாலும் கிராமிய / மெலடி / குடும்ப உணர்வுகள் கொண்டவை; “மாஸ் பீட்” பாடல்கள் அல்ல. இதுவே இவர்கள் கண்டுகொள்ளப்படாமல் போக காரணமாகவும் அமைந்தது.
சபேஷ் அதிர்ச்சி மரணம்:
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இசையமைப்பாளர் சபேஷ் உடல்நல பிரச்சனை kaaranamaaga மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சபேஷின் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.