நடிகர் அஜித்தை அடித்தாரா பாலா? நான் கடவுள் படத்தை ஏகே தூக்கியெறிந்தது ஏன்?
இயக்குனர் பாலா நடிகர் அஜித்தை அடித்ததால் தான் அவர் நான் கடவுள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படும் நிலையில், அதுபற்றிய உண்மை பின்னணியை பார்க்கலாம்.

Ajith vs Director Bala
சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பாலா. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருடன் படம் பண்ண ஆர்வம் காட்டிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அந்த வகையில் நந்தா படத்தை முதலில் அஜித்தை வைத்து தான் உருவாக்க இருந்தாராம் பாலா. ஆனால் சில காரணங்களால் அஜித் அப்படத்தில் இருந்து விலகிவிட, பின்னர் தான் அதில் சூர்யா நடித்திருக்கிறார். நந்தா படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிவிட, மீண்டும் பாலாவை நாடிய அஜித், அவரிடம் தனக்காக கதை ஒன்று தயார் செய்யுமாறு கூறி இருக்கிறார். அவர் அஜித் மீது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ஒரு அகோரி கதையை தயாரி செய்திருக்கிறார். அது தான் நான் கடவுள்.
நான் கடவுள் பட சர்ச்சை
இயக்குனர் பாலாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறதாம். அவர் யாருடன் படம் பண்ணினாலும் முழு கதையை சொல்ல மாட்டாராம். தன்னை நம்பினால் படத்தில் நடியுங்கள், இல்லையென்றால் வேண்டாம் என மூஞ்சில் அடித்தபடி சொல்லிவிடுவாராம். இந்த அகோரி கதையில் நடிக்க அஜித் ஓகே சொன்னதும் அவரை நீளமாக முடி மற்றும் தாடி வளர்க்க சொல்லி இருக்கிறார் அஜித். நீண்ட நாட்கள் அதே முடி மற்றும் தாடியோடு இருப்பதால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போய் இருக்கிறது. அதேபோல் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் பாலா என்ன தான் செய்கிறார் என்பதை தெரிந்துகொள்ள பாம் குரோ ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார் அஜித். அங்கு பாலா தன்னுடைய திரையுலக நண்பர்களுடன் இருந்தாராம்.
அஜித் - பாலா மோதல்
அப்போது பாலாவை சந்தித்து தனக்கு கதை சொல்லுமாறு கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதமும் நடந்திருக்கிறது. இந்த ஓட்டலில் என்ன நடந்தது என்பது தான் இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. ஒரு சிலரோ அஜித்தை அங்கிருந்த பாலாவின் நண்பர் ஒருவர் முதுகில் அடித்ததாக கூறுகிறார்கள். ஒரு சில பத்திரிகையாளர்களோ, அஜித் பாலா மீதுள்ள கோபத்தில் அங்கிருந்த சேரை எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக சொல்கிறார்கள். இதுதவிர அஜித் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதில் எது உண்மை, என்பது குறித்து பாலாவிடம் நடிகை சங்கீதா நடத்திய நேர்காணலில் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அஜித்தை அடித்தாரா பாலா?
நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்தபோது அவரை நீங்கள் ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று அடித்தீர்களா என்று சங்கீதா கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த பாலா, நான் அஜித்தை அடித்தேன் என்று சொல்வதெல்லாம் பத்திரிகையாளர்களின் கற்பனை. ஆனால் அதே சமயம் எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்தது உண்மை தான் என்று பாலா சொன்னதும், அந்த அறையில் என்ன நடந்தது என சங்கீதா கேட்க, அது அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் ஏன் கேட்குறீங்க என சொல்லிவிட்டார் பாலா. இருந்தாலும் அந்த அறையில் நடந்த பிரச்சனை என்பது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.