நான் சர்வதேச கைக்கூலியா? கேபிஒய் பாலா வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!
மூத்த பத்திரிகையாளர் உமாபதி, கேபிஒய் பாலாவை எதிர்கால ஆபத்து என்றும், சர்வதேச சக்திகளால் உருவாக்கப்பட்டவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு தற்போது பாலா பதிலளித்துள்ளார்.

கேபிஒய் பாலா விளக்கம்
அறம்நாடு சேனலுக்கு பேட்டி தந்த மூத்த பத்திரிகையாளர் உமாபதி, “இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கக்கூடிய நபர் கேபிஒய் பாலாதான்” என்று அதிர்ச்சிகரமாக கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியலுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஆபத்தான நபராகவே பாலா உருவாக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, தொலைக்காட்சியில் வளர்ச்சி பெற்ற பாலா, இன்று தமிழக அரசியலில் முக்கிய ஆபத்தாக பேசப்படுகிறார்.
உமாபதி பேட்டி
பாலாவின் சமூக ஊடக செயற்பாடுகள் மற்றும் ‘சென்டிமென்ட்’ புரமோஷன்கள், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. அரசு பொதுமக்களுக்காக நிதி உதவிகளை வழங்கும், தனிப்பட்ட சிலருக்கு உதவி செய்யும் வீடியோக்கள் அதிகம் பேசப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் “ஏழை வீட்டு பையன், பிறருக்கு உதவி செய்கிறார்” என்ற நம்பிக்கை பரவுகிறது. ஆனால் பாலா சம்பாதிக்கும் உண்மையான வருமானம், அந்த உதவிகளுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது தெளிவாக யாருக்கும் தெரியவில்லை.
பின்னணி காரணம்
உமாபதி தனது பேட்டியில், ஆந்திர மாநிலத்தில் பிரபலமான ஹர்ஷா சாய் போலவே பாலா உருவாக்கப்பட்டுள்ளார், இதன் பின்னணியில் பல அரசியல் மற்றும் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். நேபாளத்தில் சுதன் குருங் போன்றவர்கள் எப்படி முன்னிலைப்படுத்தப்பட்டார்களோ, அதே பாணியில் பாலாவும் வளர்க்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். “மக்களுக்கு சிறு உதவி செய்யும் போது, பெரிய அளவில் சமூகத்தையே தவறாக வழிநடத்தும் நிலை ஏற்படும்” என்று அவர் எச்சரித்தார்.
ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ், ஜல்லிக்கட்டு காலத்தில் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, தற்போது பாலாவை பயன்படுத்தும் சூழல் உள்ளது என உமாபதி கூறினார். லாரன்ஸை மக்கள் நிராகரித்த பிறகு, அடுத்த தலைமுறையாக பாலா முன்னிலைப்படுத்தப்படுகிறார். மக்களுக்கு உதவி செய்கிறவர் என்பதற்குப் பெயர், பாதுகாப்புக்காக பவுன்சர்கள், செட்டப்புகள் போன்றவை பயன்படுத்தப்படுவது இயல்பான உதவி மனப்பான்மையல்ல; அது திட்டமிட்ட அரசியல் விளையாட்டின் ஓர் அங்கமே என அவர் வலியுறுத்தினார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி பாலா
இந்த நிலையில் கேபிஒய் பாலா விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னை சர்வதேச கைக்கூலி என்று கூறுவது எனக்கே அதிர்ச்சி. நான் யாருக்காவது வண்டி கொடுத்தால், அதன் பெயரில் மாறும்; அதனால் தான் வண்டி நம்பரை மறைக்கிறேன். நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. நிகழ்ச்சிகள், ப்ரோமோஷன், சினிமா வருமானத்தில் உதவி செய்கிறேன். நான் மருத்துவமனை கட்டவில்லை, சிறிய கிளினிக் மட்டும் தான். அதற்கான நிலத்தை முன்பே வாங்கி வைத்திருந்தேன்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.