காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கேபிஒய் பாலாவுக்கு எதிராக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியை பார்க்கலாம்.
Complaint Against KPY Bala : கேபிஒய் பாலா என்று சொன்னதும் அவர் செய்த உதவிகள் தான் அனைவருக்கும் நியாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு தேடித் தேடி உதவிக்கரம் நீட்டி வருகிறார். மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுத்தது முதல், முதியவருக்கு வீடு கட்டிக் கொடுத்தது வரை இவர் செய்த உதவிகள் ஏராளம். திரையுலகிலும் யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால் முதல் ஆளாக சென்று உதவி விடுவார் பாலா. அந்த அளவுக்கு தங்கமான மனிதனாக இருக்கிறார். இதனால் இவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
சின்னத்திரையில் கலக்கி வந்த பாலா, காந்திக் கண்ணாடி என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஷெரிப் இயக்கிய இப்படத்தில் பாலாவுடன் பாலாஜி சக்திவேல், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காந்தி கண்ணாடி திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்து இருந்தனர். இப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.3 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.

பாலா மீது புகார் கொடுக்கப்பட்டது ஏன்?
காந்திக் கண்ணாடி திரைப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஆக உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காந்திக் கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறிப்பிட்டு சிவசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இப்படத்தின் இயக்குனர் ஷெரிஃப், நடிகர் கேபிஒய் பாலா, நடிகர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
பணமதிப்பிழப்பின் போது நடந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் காந்தி கண்ணாடி திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. பாலா ஹீரோவாக நடித்த முதல் படம் இது என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தற்போது அப்படமே சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. இந்த புகாரால் காந்தி கண்ணாடி படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
