தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட கிங்டம்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
விஜய் தேவரகொண்டா நடித்த பான் இந்தியா படமான கிங்டம், ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Kingdom Movie OTT Release
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் தேவரகொண்டா. சமீப காலமாக அவருக்கு பெரிய வெற்றிப்படங்கள் இல்லை. அதனால் கிங்டம் படத்தின் வெற்றியை அவர் மலைபோல் நம்பி இருந்தார். ஆனால் அந்தப் படம் அவருக்கு பெரியளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இப்போது அந்தப் படம் ஓடிடியில் வெளியாகிறது. கிங்டம் படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 15.75 கோடி ரூபாய் வசூலித்ததாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கிங்டம் ஓடிடி ரிலீஸ்
உலகம் முழுவதும் இதுவரை 82.04 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரையரங்குகளில் படத்தின் ஓட்டம் முடிவடைந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 27 முதல் நெட்ஃபிளிக்ஸில் கிங்டம் வெளியாகிறது. 'கிங்டம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்சே நடித்துள்ளார். சத்யதேவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கௌதம் தின்னனூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாகவம்சி, சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர். திரையரங்குகளில் சராசரி வசூலைப் பெற்ற இந்தப் படம், ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கிங்டம் படத்தின் கதை
'கிங்டம்' படத்தின் கதை என்னவென்றால், விஜய் தேவரகொண்டாவும், சத்யதேவும் சகோதரர்கள். தந்தையின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் சத்யதேவ் தந்தையைக் கொன்றுவிட்டு ஸ்ரீலங்காவுக்குத் தப்பிச் செல்கிறார். அங்குள்ள தமிழர்கள் உள்ளூர் தங்கக் கடத்தல் மாஃபியாவுக்குக் கீழ் வேலை செய்கிறார்கள். தப்பிச் சென்ற சத்யதேவ், ஸ்ரீலங்கா தமிழர்களிடம் வளர்ந்து, அவர்களின் தலைவராகிறார். மறுபுறம், விஜய் தேவரகொண்டா காவல்துறையில் பணியில் சேர்கிறார். சிறுவயதிலிருந்தே தனது அண்ணனைத் தேடுகிறார். விஜயின் திறமையைப் பார்த்த ஒரு அதிகாரி அவரை ஸ்பை ஆக்குகிறார். ஸ்ரீலங்காவில் நடக்கும் தங்கக் கடத்தல் பற்றிய தகவல்களைச் சேகரிக்க அனுப்புகிறார். அங்கு உங்கள் அண்ணன் இருக்கிறார் என்றும் கூறுகிறார். விஜய் ஸ்ரீலங்கா சென்று என்ன செய்தார்? தனது அண்ணனைக் கண்டுபிடித்தாரா? அங்குள்ள மாஃபியாவை அழித்தாரா என்பதே படத்தின் கதை.
பான் இந்தியா படமாக வெளியான கிங்டம்
ஜெர்சி போன்ற படங்களை இயக்கிய கௌதம் தின்னனூரி இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜோமோன் டி. ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி மொழிகளிலும் இப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார். இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் பெரியளவில் பேசு பொருள் ஆனது. அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதிரடி நிறைந்த இந்தப் படத்திற்காக விஜய் தேவரகொண்டா தனது உடலமைப்பை மாற்றி மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார்.